கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ’ஒரு தலை ராகம்’ ரவீந்தர், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 30 பேர் ‘முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்’ என்றும், ’புதிய அணையைக் கட்ட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் போலவும் நடத்தினர்.
இதனைக் கண்டு வெகுண்டெழுந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், திரைப்படத் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஒன்றுகூடி, ”8000 ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும்”, “முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும்”, “அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும்”, “அன்பிற்குரிய கேரள மக்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கவேண்டும்” “அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி” என்றும் தொடர்ந்து உரக்க முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றனர். உடனடியான இந்த பதில் நடவடிக்கையைக் கண்டவர்கள் வியப்படைந்தனர். இரண்டு குழுவினரும் முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றதால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.
செய்தியாளர்களிடையே பேசிய மாணவர்கள், “கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனடியாக தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு தமிழக மக்களின் வாழ்வாதாரம். அதனை ஒருபோதும் விட்டுத் தர முடியாது. இதற்காக தமிழக மாணவர்கள் போராடுவார்கள்” என்று தெரிவித்தனர். இந்திய, சர்வதேச பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களிடம் அவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பான உண்மை நிலைமையினை விளக்கினர்.
பிறகு அங்கு வந்த காவல்துறையினர் தமிழ் மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டினர். ”கேரளப் போராட்டக் குழுவினர் கலைந்து சென்றால் தான் நாங்களும் கலைந்து செல்வோம். அவர்கள் ஒரு வேளை போராட்டம் செய்தால் தொடர்ந்து பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து, பின்னர் கேரள போராட்டக் குழுவினர் கலைந்து சென்றதும் தமிழ்மாணவர்களும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
No comments:
Post a Comment