|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 November, 2011

பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெறுவது முடியவே முடியாது அண்ணா பல்கலை துணைவேந்தர்!


பணம் வாங்கிக் கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக கூறி அணுகும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். எந்த தவறான வழிமுறைகளிலும் கூடுதல் மதிப்பெண்களை பெற முடியாதவாறு பல்கலையின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன,'' என்று கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன் கூறினார்.கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலையின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் இன்ஜி., கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தேர்வில் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக அண்ணாமலை பல்கலையை சேர்ந்த ஒரு உதவி பேராசிரியர் ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்த சம்பவம் சமீபத்தில் வெளியானது. கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன் கூறியதாவது:கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலையின் தேர்வுத்தாள் திருத்தும் பணி, பாதுகாக்கப்பட்ட ஒரு பணித்திட்டம். குறுக்கு வழிகளில் ஈடுபட்டு தேர்வில் வெற்றி பெறும் வழிமுறையை தடுக்கும் பல்வேறு பரிசோதனை அளவீடுகள் இத்திட்டத்தில் உள்ளன. கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் கோவை, சேலம், ஈரோடு ஆகிய மூன்று மண்டலங்கள் உள்ளன. 

மைய தேர்வுத்தாள் திருத்தும் பணி இம்மூன்று மண்டலங்களிலும் ஒரே நேரத்தில் நடக்கிறது.பல்வேறு கல்லூரிகளில் இருந்து பெறப்படும் விடைத்தாள்கள் பாடவாரியாக தொகுக்கப்படுகின்றன. அவை, பிரிக்கப்பட்டு வெவ்வேறு மண்டலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மாணவரின் அடையாளக் குறிப்புகள், மாற்றுக் குறி எண்கள் மூலம் நீக்கப்பட்டு, அது குறித்த தகவல்கள் வெளியாகாமல் பாதுகாக்கப்படுகின்றன. தேர்வுத்தாள் திருத்தும் பணியையும், திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியர்களையும் கண்காணிக்க, பல்கலையில் இருந்து முதன்மை தேர்வு அலுவலர், தேர்வு திருத்தும் துறைத் தலைவர், முகாம் அலுவலர், மண்டல அலுவலர், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்வுத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், மாற்றுக் குறியீட்டு எண்கள் மாணவர்களின் பதிவு எண்களுடன் பொருத்தும் பணி நடக்கிறது. 

அவை ஓ.எம்.ஆர். தாள்களில் மதிப்பெண்களாக குறிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தேர்வு கட்டுப்பாட்டுத் துறையினர் ஓ.எம்.ஆர். மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது.இந்த பல்வேறு கட்டங்களில், மனிதர்களின் பங்களிப்பு பல நிலைகளில் இருந்தபோதும், பெரிய அளவில் பாதுகாப்பு நிலை பின்பற்றப்படுகிறது. விடைத்தாள்களின் மறு மதிப்பீட்டிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது. மாணவர்களும் பெற்றோரும் இது குறித்து விழிப்புடன் இருந்து தங்கள் நேரத்தையும், பணத்தையும் இது போன்ற தவறான செயல்களில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, அவர்கள் தோல்வி அடைந்த பாடங்களில் சிறப்பு பயிற்சி பெற இப்பணத்தை செலவிடலாம். சில பல்கலைகளில் நியாயத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் நடைபெறுவதாக சில கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர். அப்பல்கலைகளின் பெயர்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வியாளர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, துணைவேந்தர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...