திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தினத்தின் முக்கிய விழாவான மகாதீப விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால் அங்கு பாதுகாப்பு ஏற்படுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப பெருவிழா 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
21 தலைமுறை புண்ணியம் திருவண்ணாமலையில் தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கின்றது அருணாசல புராணம். இதன்படி திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது, பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது.
பத்துநாட்கள் திருவிழா இந்த ஆண்டிற்கான விழா நவம்பர் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமான மகாதீபம் நாளை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளையும் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கடந்த 4ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், பெண்களே வடம் பிடித்து இழுத்த பராசக்தி அம்மன் தேரோட்டம் கடந்த திங்களன்று நடைபெற்றது.
பரணி தீபமும் மகாதீபமும் கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் வைகுந்த வாயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குல மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். இதன்பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளில் மக்கள் விளக்கேற்றி வழிபடுவர்
அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு பார்வதி தேவியை சிவபெருமான் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராய் ஆனதைக் குறிக்கும் வகையில், கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கிறது. இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் கிடைக்கும்.
தெப்பத் திருவிழா உற்சவத்தின் தொடர்ச்சியாக 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், நகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிட வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 15 இடங்களில் மருத்துவ முகாம்கள், 9 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறை சார்பில் 33 உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து 2,000 சிறப்பு பஸ்கள் 6 ஆயிரம் நடைகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment