பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி வருகிறது என்று சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக், தலிபான் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொகரம் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஷியா முஸ்லீம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. தலிபான் தலைமையிலான பயங்கரவாத அமைப்பு, இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது, பாகிஸ்தானில் மொகரம் பண்டிகை அமைதியாக நடைபெற்றது. இதற்கு, தலிபான் பயங்கரவாத அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளும், மதச் சடங்குகளை கடைப்பிடித்து வருவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது. அவர்கள் (பயங்கரவாதிகள்) தீவிரவாத செயலை கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முன்வரவேண்டும் என்று அவர் பயங்கரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment