2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மேலாண்மைக் கல்வி மையங்களிலும் எம்.பி.ஏ. சேர்க்கைக்கு காமன் மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்படும் சிமேட் தேர்வு அவசியமாக்கப்படும் என்று ஏஐசிடிஇ தலைவர் மந்தா தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.ஏ. சேர்க்கை சிமேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாக வைத்தே நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை நிராகரிப்பதற்கு கல்வி நிறுவனங்களுக்கோ, மாநிலங்களுக்கோ எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஏஐசிடிஇ-யினால் சிமேட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதால், அனைத்துக் கல்லூரிகளும் இதனை பொதுவானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல் இதனால் தீர்வு பெறும்.
பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் பங்குபெற மாணவர்கள் உழைப்பையும், ஏராளமான பணத்தையும் செலவிட வேண்டியுள்ளது. சிமேட் தேர்வினால் இந்த நிலை முடிவுக்கு வருகிறது என்று மந்தா தெரிவித்துள்ளார். சிமேட் தேர்வு இந்தியாவில் உள்ள 62 மையங்களில் நடைபெறுகிறது. சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். 100 மதிப்பெண்களைக் கொண்ட இந்த தேர்வில் 4 பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும், எம்.பி.ஏ., பொறியியல், பார்மசி, எம்.சி.ஏ. போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் சேர்க்கை முறை முழுமையையும் ஏஐசிடிஇ தலைமை ஏற்று நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால் நுழைவுத் தேர்வுக்குப் பிறகு நடைபெறும் நேர்காணல் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்கலாம்.புதிய கல்லூரிகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கும் காலம் அக்டோபர் 6ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலும், அனுமதி அளிப்பது மார்ச் 31ம் தேதி வரையிலும் முடிந்துவிட்டால், ஏப்ரல் மாதத்தில் புதிய கல்லூரிகள் சேர்க்கை துவங்க சரியாக இருக்கும். இதனால் மாணவ சேர்க்கையும் எளிதாக நடைபெறும். ஆனால் தற்போதோ, சில கல்லூரிகள் ஜுன், ஜுலை மாதங்களில் அனுமதி பெறுகின்றன. அப்போது மாணவ சேர்க்கை துவங்கிவிடுகிறது. அதன் பிறகு அந்த கல்லூரிகளில் மாணவ சேர்க்கையை நடத்துவது மிகவும் சிரமத்திற்குள்ளாகிறது என்று மந்தா கூறினார்.
No comments:
Post a Comment