மிகவும் குறைந்த விலைக்கு, "எஸ்-பாண்டு' அலைக்கற்றைகள் ஒதுக்கியதில், முறைகேடு குறித்தான புகாரின் அடிப்படையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அரசு பதவி, குழுத் தலைவர் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. "இது முழுக்க முழுக்க இஸ்ரோ தலைவரின் சர்வாதிகாரப் போக்கு; இதை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்வேன்' என, மாதவன் நாயர் ஆவேசப்பட்டார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) தயாரித்து பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி பெருமை பெற்ற அமைப்பு. அலைக்கற்றைகள் (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் இதன் வர்த்தக அங்கமான ஆன்டிரிக்ஸ் நிறுவனம், தன்னிடம் உள்ள இரு செயற்கைக்கோள்களின் 70 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகளை, தேவாஸ் மல்டி மீடியாவுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்தது. அப்போது, இஸ்ரோவின் தலைவராக மாதவன் நாயர் பதவி வகித்தார். ஸ்பெக்ட்ரம் "எஸ்-பாண்ட்' வழங்கும் ஒப்பந்தம், 2005ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி கையெழுத்தானது. ஆனால், இதை விட குறைவாக, அதாவது 20 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகள், பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய தொலைபேசி நிறுவனங்களுக்கு 12 ஆயிரத்து 847 கோடி ரூபாய்க்கு இதே நிறுவனம் ஒதுக்கீடு செய்தது. இதனால், தேவாஸ் நிறுவனத்திற்கு இஸ்ரோ ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தான் பிரச்னையை கிளப்பியது.
இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, தேவாஸ் நிறுவனத்துடன் இஸ்ரோ செய்து கொண்ட ஒப்பந்தத்தை, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. காரணம், "எஸ்-பாண்ட்' அலைக்கற்றைகள் செயற்கைக்கோள் மூலம், "மொபைல் டிவி' ஒளிபரப்பு உட்பட அதிநவீன திட்டங்களுக்கு உதவும் அரிய வகை சாதனம் ஆகும். இதுகுறித்து, மத்திய அமைச்சரவைக்கு இஸ்ரோ அளித்த அறிக்கை சரியானதா என்பது குறித்து அறிய, கடந்தாண்டு மே மாதம் 31ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங், ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார்.
ஒழுங்கு நடவடிக்கை: இக்குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. இந்நிலையில், இக்குழு அளித்துள்ள பரிந்துரையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இந்நிறுவன முன்னாள் அறிவியல் துறைச் செயலர் பாஸ்கர நாராயணா, ஆன்டிரிக்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குனர் கே.என்.சங்கரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
அரசு பதவிக்கு தடை: இதையடுத்து, நேற்று மத்திய அரசு, இந்த நால்வரும் வருங்காலத்தில் அரசு பதவியையோ, குழு, கமிட்டி போன்ற எந்த அமைப்பு பதவியையும் வகிக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மத்திய அரசு உயரதிகாரிகளுக்கும், மாநில தலைமை மற்றும் உள்துறைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இஸ்ரோவின் ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை குறித்து, இன்னும் ஓரிரு நாளில் மத்திய விண்வெளித் துறையிடம் இருந்து அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment