|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2011

இலவச அறிவிப்புகள் கண்டனத்திற்குரியது: எஸ்.ஒய்.குரேஷி

மாவு அரைக்கும் இயந்திரம், லேப் டாப், திருமணத்திற்குத் தாலி என்று தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளும் வாக்காளர்களுக்கு தருவதாக உறுதியளித்துள்ள இலவசங்கள் கவலையளிக்கக்கூடிய தேர்தல் போக்குகள் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார்.

டெல்லியில், ‘தேர்தல் முறைகளை காப்பது - இந்தியாவின் முன்னெடுப்பு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இலவச உறுதிமொழி அறிவிப்புகள் வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக ஈர்க்கவே செய்யப்படுகின்றன என்றாலும், அதனை தடுக்க தேர்தல் ஆணையத்தால் முடியாது என்று கூறியுள்ளார்.

மிக்சி முதல் லேப் டாப் வரை வழங்குவதாக வாக்காளர்களை கவரும் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும், இதனை பொதுமக்களும் உணர்ந்துள்ளார்கள். வாக்காளர்களை கவரும் இப்படிப்பட்ட அறிவிப்புகள் கண்டனத்திற்குரியவை” என்று கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் இந்த உறுதிமொழிகள் அளிக்கப்படுவதால் அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆனால், தேர்தல் செலவில் ஏதேனும் குற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் வேட்பாளர் ஒருவர் பிரியாணி செய்து போட ஒரு வண்டி நிறைய கோழிகளை ஏற்றிச் சென்றார். அதனை தேர்தல் பார்வையாளர்கள் தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர். வாக்காளர்களைக் கவர இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...