நாட்டின் பொருளாதாரம் ஐந்து சதவீதம் உயர வேண்டுமெனில், கடல்வழி பொருளாதாரம் 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும். உலக வரிசையில் இந்தியா, சீனா மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்தாலும், சீனாவில் ஆங்கில மொழியறிவு குறைவு. எனவே சீனர்களால் கடல்பணிகளில் சேர இயலவில்லை. கடல்பணிகளில் சேசருவதற்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். வெளிநாட்டு கப்பல்களில் மாலுமிகளாக, சேவையாளர்களாக இந்தியர்களே அதிகளவில் பணிபுரிகின்றனர்.
மரைன் இன்ஜினியரிங் படிப்பதற்கு பிளஸ் 2 வில் குறைந்தபட்சம் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தனித்தனியாக 60 சதவீதமும், மொத்தமாக 60 சதவீத மதிப்பெண்ணும் பெறவேண்டும். நல்ல உடற்திறன், கண்பார்வை வேண்டும். நாட்டிகல் சயின்ஸ் படிப்பில் மூன்றாண்டுகள் கல்லூரியிலும், ஓராண்டு கப்பலிலும் செய்முறை பயிற்சி பெற வேண்டும். மதுரையில் ஆர்.எல்.ஐ.என்.எஸ்., கல்லூரியில் இப்படிப்பு உள்ளது.
இந்தியாவில் மும்பை, கோல்கட்டாவில் உள்ள நான்கு அரசு பயிற்சி மையங்களில் படிக்கலாம். பயிற்சிக்கு பின் இளநிலை பொறியாளராகலாம். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தால், ஓராண்டு மரைன் பயிற்சி பெற்று மரைன் இன்ஜினியர்களாகலாம். கடல் பணிக்கு சென்ற பின், விருப்பமில்லை என சொல்லக் கூடாது என்பதால் இப்படிப்பிற்கு உளவியல் ரீதியாக மனதை அறிந்து கொள்ளும் "சைசக்கோமெட்ரிக்" தேர்வு நடத்தப்படுகிறது.
மாலுமியாவதற்கு எல்லா நிலைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இந்திய மாலுமிகளையே விரும்புகின்றனர். கப்பலில் ஆறுமாதங்கள் மாலுமியாக பணியாற்றினால், ஆறுமாத விடுப்பு கிடைக்கும். தற்போது மனைவி, இரண்டு குழந்தைகள் கப்பலில் செல்லலாம் என்ற சலுகையும் உள்ளது. ஆனால் கப்பலில் பணி செய்வது சற்றே கடுமையான விஷயம். கடின உழைப்பிருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
கப்பல் போக்குவரத்து, ஆண்டுதோறும் ஏழு சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் போது சேவையாளர்களின் பணியிடங்களும் அதிகரிக்கும். எனவே பணிவாய்ப்பு அதிகமுள்ள துறையாக உள்ளது.
இந்தியாவில் கடல்துறை அலுவலர்கள் 8900 பேரும், வெளிநாடுகளில் 18 ஆயிரம் பேரும், இந்தியாவில் 21ஆயிரம் சேவையாளர்களும், வெளிநாடுகளில் 34 ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர். கடலில் பணி செய்பவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கினாலும், வருமான வரி பிடித்தம் செய்வதில்லை. 2015ல் பணியிடத்தின் தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும். பெண்களுக்கு கல்வி கட்டணத்தில் 30 சத சலுகை வழங்கப்படுகிறது. கடல்துறையிலிருந்து வெளியே வந்த பின் பல்வேறு நிறுவனங்களில் தொடர்ந்து பணி வாய்ப்பு பெறலாம், என்றார்.
No comments:
Post a Comment