ஆஸ்திரேலியாவிற்கு கல்வி கற்க செல்லும் முன்பாக, எந்தெந்த வகையில்
முன்னேற்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அதன்மூலம் பயணத்தை சிறப்பான
முறையில் அமைத்துக் கொள்வது குறித்து மாணாக்கர்கள் அனைவரும் அறிந்து
வைத்துக் கொள்வது நலம்.
பலவிதமான பிரச்சினைகளுக்குப்
பிறகும், ஆஸ்திரேலிய நாடானது, சர்வதேச அளவில் அதிகளவு மாணவர்களை இழுக்கும்
ஒரு முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. எனவேதான், மாணவர்களுக்கு அவசியமாக
தேவைப்படும் முன்னேற்பாடு குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
புறப்படும் முன்பாக
* பாஸ்போட்டிற்கு விண்ணப்பம் செய்து, அதன் Validity, நீங்கள் படிக்கும் காலம் வரை போதுமானதா என்பதை உறுதிசெய்யவும்.
* மாணவர் விசாவுக்கு ஏற்பாடு செய்யவும்
* நீங்கள் அந்நாட்டில் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை
தொடர்புகொண்டு, உங்களின் சேர்க்கை மற்றும் ஆரம்பத் தேதியை உறுதிசெய்து
கொள்ளுங்கள். மேலும், அந்த நிறுவனங்கள் விமான நிலையத்திற்கே வந்து
மாணவர்களை அழைத்துச் செல்லும் விதிமுறையை வைத்துள்ளனவா என்பதையும்
உறுதிசெய்யவும்.
* உங்கள் மருத்துவரிடமிருந்து தேவையான நோய் காப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும்.
* ஆஸ்திரேலியாவில் தேவைப்படும் நிதிக்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
* உங்கள் வங்கியின் வெளிநாட்டுப் பயன்பாட்டு வசதியைப் பற்றி நன்கு விசாரித்து தெரிந்துகொள்ளவும்.
* பயணக் காப்பீடு உட்பட, தேவையான பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
* ஆஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் நீங்கள் தங்கியிருக்கும் முதல் வாரத்திற்கான தங்கும் ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
* விமான நிலையத்திலிருந்து, தங்குமிடம் செல்வதற்கான பயண ஏற்பாடுகளைத்
திட்டமிட்டுக் கொள்ளவும் மற்றும் அந்நாட்டில் உங்களின் அவசர
பயன்பாட்டிற்குத் தேவைப்படும் பணத்தை ஆஸ்திரேலிய பணமாக மாற்றிக் கொள்ளவும்.
* பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்கையில், நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி
நிலையத்தினுடைய சர்வதேச பிரதிநிதியின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களைக்
குறித்துக் கொண்டீர்களா? என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.
முக்கியமான ஆவணங்கள்
* தகுதியான பாஸ்போர்ட்
* உங்களுடைய மாணவர் விசா உறுதியளிப்பு கடிதம்
* கல்வி நிறுவனம் வழங்கிய இடம் மற்றும் சேர்க்கை கடிதம்
* சேர்க்கைக்கான மின்னணு உறுதியளிப்பு
* பணம் கட்டியதற்கான ரசீதுகள்
* காப்பீட்டு பாலிசிகள்
* உங்கள் கல்வித்தகுதிப் பற்றிய சான்றளிக்கப்பட்ட நகல்கள்
* மருத்துவப் ஆவணங்கள் மற்றும் பரிந்துரை சீட்டுகள்
* கிரெடிட் மற்றும் ATM அட்டைகளின் நகல்கள்
* மருந்து விபரச் சீட்டுகள்
இதுபோன்ற தேவையான ஆவணங்களுடன் நீங்கள் புறப்படும்போது, அவற்றின் நகல்களை
வீட்டில் விட்டுச்செல்லவும். ஏனெனில், ஆஸ்திரேலியாவில், உங்களது அசல்
ஆவணங்கள் எதுவும் தொலைந்துவிட்டால், இந்த நகல்களை நீங்கள் பெறலாம்.
பயணத்தின்போது, முக்கிய ஆவணங்களை உங்களுடனேயே வைத்துக்கொள்ளவும். காப்பீடு பயணக்காப்பீடு பயணக் காப்பீட்டை வைத்துக்கொள்வது எப்போதுமே புத்திசாலித்தனமான ஒன்றாக
கருதப்படுகிறது. ஏனெனில், விமானங்கள் ரத்தாகும்போது, உங்களின் பொருட்கள்
தொலையும்போது உங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகமாக இருக்கும். எனவே,
காப்பீட்டின் மூலம் இத்தகைய இழப்புகளைக் குறைக்கலாம்.
மருத்துவக் காப்பீடு
ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவின் கீழ் தரையிறங்கும் ஒவ்வொருவரும்,
வெளிநாட்டு மாணவர் மருத்துவ வசதியை(Overseas student health cover), அவர்
தங்கியிருக்கும் காலம் வரையில் வைத்திருக்க வேண்டும். அந்த வசதியானது,
நீங்கள் அந்நாட்டில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் மருத்துவ சிகிச்சை
எடுத்துக்கொள்ள உதவும்.
உங்களுக்கு தேவையான பணம்
ஆஸ்திரேலியாவின் ஆரம்ப நாட்களை சமாளிக்க, உங்களிடம் தேவையான பணத்தை
வைத்துக் கொள்ளவும். அதேசமயம், மிக அதிகளவிலான பணத்தை உங்களிடம்
வைத்துக்கொள்ள வேண்டாம். பயணர் காசோலையில் A$1,500 முதல் A$3,000 வரை
வைத்திருந்தால், அங்கே உங்களுக்கான ஆரம்பகட்ட தேவைகளை நிறைவுசெய்துகொள்ள
ஏதுவாய் இருக்கும். அதேசமயம், உங்களிடம் A$10,000 தொகைக்கு அதிகமாக
இருந்தால், அந்நாட்டில் நுழையும்போது, அந்த சுங்க அதிகாரிகளிடம் அதைப்பற்றி
தெரிவிக்க வேண்டும்.
தங்குமிட ஏற்பாடுகள்
நீங்கள் பள்ளிப் பருவ வயது மாணவனாக இருந்தால், அந்நாட்டை சென்றடைவதற்கு
முன்பாகவே ஒரு தங்குமிட ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டும். அதேசமயம், கல்லுரி
அல்லது பல்கலைக்கழக நிலையிலான மாணவராக இருந்தால், அங்கே சென்ற ஆரம்ப
நாட்களில் ஏதேனும் ஒரு தற்காலிக ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டியிருக்கும்.
இந்த விஷயத்தில் நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனம் உங்களுக்கு துணை
நிற்கலாம். இல்லையெனில்
www.yha.com.au என்ற இணையதளத்தில் தேடவும்.
மேலும், ஹோட்டல் அறைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு
செய்துகொள்ளும் பொருட்டு, கடைசிநேர இணையதள பதிவு வசதிகள் அதிகளவில் உள்ளன.
இவற்றில்
www.getaroom.com.au மற்றும்
www.wotif.com
என்பவை முக்கியமானவை. ஆஸ்திரேலியாவில் பொதுவாக ஹோட்டல் அறைகளுக்கு அதிக
செலவாகும். பல முக்கிய நகரங்களில் ஒரு இரவிற்கான செலவு குறைந்தபட்சம் A$150
-இலிருந்து தொடங்குகிறது.
பொருட்களுக்கான அளவு
நீங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான எடை வரைமுறைகளை நீங்கள்
தெரிந்து கொள்வது நல்லது. வெளிநாட்டு விமானங்களில் அதிகபட்சமாக 23
கிலோவிற்கு கூடாமல் இருக்க வேண்டும். அதேசமயம், ஆஸ்திரேலியாவிற்குள்
செய்யும் பயணங்களின் பொருள் எடை 20 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இல்லையெனில், நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆடை வரையறைகள்
பொதுவாக ஆஸ்திரேலிய மாணவர்கள், பாரம்பரிய முறையில்(formal) அன்றி,
இலகுவான(informal) முறையில் உடையணிகிறார்கள். கல்லூரி மற்றும் பல்கலை
மாணவர்கள் பொதுவாக டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிகிறார்கள். அதேசமயம், பல பள்ளி
மாணவர்கள் சீருடை அணிகிறார்கள்.
அந்நாட்டில் கோடைகாலம் என்பது டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும்,
இலையுதிர் காலம் மார்ச் முதல் மே வரையிலும், குளிர்காலம் ஜுன் முதல் ஆகஸ்ட்
வரையிலும், வசந்தகாலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும் இருக்கும்.
அந்நாட்டில் ஜனவரியும், பிப்ரவரியும் அதிக வெப்பமுடைய மாதங்கள். எனவே
நீங்கள் எப்போது அங்கே செல்கிறீர்களோ, அதற்கேற்ற ஆடை ஏற்பாடுகளை செய்து
கொள்ளவும்.
மருந்துக் கட்டுப்பாடுகள்
நீங்கள் உங்கள் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட வகை மருந்துகளை
அந்நாட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்பினால், அதற்கு அந்நாட்டு சட்டப்படி
அனுமதி உண்டா? என்பதை முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டும். இதைப்பற்றிய
முழுமையான தகவலுக்கு
www.tga.gov.au என்ற இணையதளம் செல்லவும்.
அதிகளவிலான மருந்துகள் ஆஸ்திரேலியாவில் கிடைக்கின்றன. நம் நாட்டைப்
போன்று அங்கு நினைத்தவுடன், மருத்துவர் பரிந்துரையின்றி(prescription)
மருந்துகளை வாங்கிவிட இயலாது. எனவே, அங்கு சென்றவுடன் ஒரு சரியான
மருத்துவரை அணுகி, அவரிடம் பரிந்துரை சீட்டை பெற்றுக்கொள்ளவும்.
மின்சாதனப் பயன்பாடு
ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மின்சாதனப் பொருட்களின் நிலையான வோல்டேஜ்
240 வோல்ட்டுகள். பெரும்பாலான கணினிகள், செல்போன் மின்னேற்றிகள்(chargers),
MP3 ப்ளேயர்கள், டிஜிட்டல் கேமராக்கள், 110 முதல் 240 வோல்டேஜ்களுக்குள்
ஒத்துவந்து இயங்கக்கூடியவை. ஆனால் சிலவகை மின்சாதனப் பொருட்களுக்கு
மாற்றிகள் தேவைப்படும்.
எனவே ஆஸ்திரேலிய பயன்பாட்டிற்கு ஏற்ற Plugs, Adaptors ஆகியவற்றை அங்குப் பெற்றுக்கொள்ளவும்.
கணினிப் பயன்பாடு
கணினி என்பது பலரின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. எனவே,
ஆஸ்திரேலியா செல்கையில், உங்களது கணியை எடுத்துச்செல்லும்போது அந்நாட்டு
சுங்க விதிமுறைகளை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
குறுகியகால படிப்புகள் மற்றும் நீண்டகால படிப்புகள், குறுகியகால கணினிப்
பயன்பாடுகள் மற்றும் நீண்டகால கணினிப் பயன்பாடுகள் ஆகியவற்றைப்
பொறுத்தும், அந்தக் கணினி எவ்வளவு நாட்களாக உங்களின் பயன்பாட்டில்
இருக்கிறது என்பதைப் பொறுத்தும், அதனுடைய விலை மதிப்பை பொறுத்தும் வரி
விதிப்பு மற்றும் வரி விலக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதைப்பற்றி
தெளிவான தகவல்களை அறிந்துகொள்ள
www.customs.gov.au என்ற இணையதளம் செல்க.