|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 August, 2011

கருணாநிதி குடும்ப பத்திரிகையை படித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது முதல்வர்!

கருணாநிதி குடும்ப பத்திரிகையை படித்து, சட்டசபையில் நேரத்தை வீணடிக்கக் கூடாது,'' என, ஆளுங்கட்சி உறுப்பினர்களை, முதல்வர் ஜெயலலிதா கண்டித்தார். சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசும்போது நடந்த விவாதம்: விஜயபாஸ்கர்- அ.தி.மு.க: பட்ஜெட்டில் குறை என்று எதுவுமே கூற முடியாத அளவுக்கு, அனைத்து திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு இலவசங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இலவச, "லேப்-டாப்' மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு, 1,500 ரூபாய், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை, ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால், மாதம், 250 ரூபாய் கிடைக்கும். மாணவர்களின் கைச் செலவுக்காக, முதல்வர் இதை வழங்கியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா: மாணவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதை தடுப்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ் 1 மாணவர்களுக்கும் தலா, 1,500 ரூபாய் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும். 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கு, பிளஸ் 2 படிக்கும் போது, மொத்தம், 5,000 ரூபாய் கிடைக்கும். இந்த தொகை, மாணவர்களின் பெயரில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, பிளஸ் 2 படிப்பை முடிக்கும்போது மொத்தமாக வழங்கப்படும்.

விஜயபாஸ்கர்: தி.மு.க., பத்திரிகையில், பட்ஜெட்டைப் பற்றி பல்வேறு குறைகளை கூறியுள்ளனர். அறிவித்துள்ள திட்டங்களை புரிந்து கொள்ளாமல், வேண்டும் என்றே குறை கூறுகின்றனர். ஐந்து முறை முதல்வராக இருந்தார், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார், என்கின்றனர். ஆனால், சட்டசபையில் அவர் கால் கூட வைப்பதில்லை. இன்னொருவரை, "தளபதி, தளபதி' என்கின்றனர். அவர், பள்ளி குழந்தைபோல், "சட்டசபையில் இந்த இடத்தில் தான் நாங்கள் உட்காருவோம்' என அடம் பிடிக்கிறார். இவர்கள் எல்லாம் இப்படி செய்வர் என தெரிந்து தான், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட அவர்களுக்கு மக்கள் தரவில்லை.

முதல்வர் ஜெயலலிதா: விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர் குடும்ப பத்திரிகையை படித்துவிட்டு பேசுகிறார். அந்த பத்திரிகையை யாருமே படிப்பதில்லை. இவர் மட்டும் ஏன், அதை படித்துவிட்டு இங்கே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்? முன்னாள் முதல்வர் குடும்ப பத்திரிகையை படிக்க செலவிடும் நேரத்தை, நல்ல புத்தகத்தை படிப்பதற்கு செலவிடலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...