கேப்டவுன் டெஸ்டில், தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் சிதறிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 47 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வேகத்தில் தடுமாறிய தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 96 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இதன்மூலம் முதல் டெஸ்டில், வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் மழை பொழிந்தனர். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. சதம் கடந்த மைக்கேல் கிளார்க் (151) நம்பிக்கை அளித்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
வாட்சன் மிரட்டல்: பின், முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, வாட்சன் வேகத்தில் தடுமாறியது. ருடால்ப் (18), கேப்டன் ஸ்மித் (37), ஆம்லா (3), காலிஸ் (0), பிரின்ஸ் (0), டிவிலியர்ஸ் (8), பவுச்சர் (4) உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 96 ரன்களுக்கு சுருண்டது. ஸ்டைன் (9) அவுட்டாகாமல் இருந்தார். வேகத்தில் மிரட்டிய வாட்சன் 5, ரியான் ஹாரிஸ் 4 விக்கெட் கைப்பற்றினர்.
சரியான பதிலடி: பின், 188 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, தென் ஆப்ரிக்கா சரியான பதிலடி கொடுத்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க்(2), பாண்டிங்(0), மைக்கேல் ஹசி(0) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். நாதன் லியான் (14), பீட்டர் சிடில் (12*) போராடினர். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 47 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா சார்பில் பிலாண்டர் 5, மார்னே மார்கல் 3, ஸ்டைன் 2 விக்கெட் வீழ்த்தினர். பின், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ருடால்ப் (14) ஏமாற்றினார். இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து, 155 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஸ்மித் (36), ஆம்லா (29) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் பீட்டர் சிடில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
நான்காவது குறைந்தபட்சம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 47 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் அரங்கில் தனது நான்காவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக மூன்று முறை இங்கிலாந்துக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது.
ஆஸ்திரேலியாவின் "டாப்-5' மோசமான ஸ்கோர்:
எதிரணி ஸ்கோர் ஆண்டு இடம்
இங்கிலாந்து 36 1902 பர்மிங்ஹாம்
இங்கிலாந்து 42 1888 சிட்னி
இங்கிலாந்து 44 1896 ஓவல்
தென் ஆப்ரிக்கா 47 2011 கேப்டவுன்
இங்கிலாந்து 53 1896 லார்ட்ஸ்
மோசமான ஸ்கோர்
கேப்டவுன் டெஸ்டில் 47 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 1950ல் டர்பனில் நடந்த டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு சுருண்டது.
* முதல் இன்னிங்சில் 96 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழாவது மோசமான ஸ்கோரை பெற்றது. முன்னதாக தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 (1932), 45 (1932), 80 (1910), 85 (1902), 85 (1902), 95 (1912) ரன்களில் "ஆல்-அவுட்' ஆனது.
No comments:
Post a Comment