கனிமொழிக்கு ஜாமின் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அவரை வரவேற்க டில்லியிலும், சென்னையிலும் தி.மு.க.,வினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால், அனைத்திலும் மண்... ஜாமின் கிடைக்கவில்லை. தற்போது, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார் கனிமொழி. அதிர்ச்சியில் உறைந்துள்ள கருணாநிதி, என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார். கனிமொழியின் ஜாமினை சி.பி.ஐ., எதிர்க்கவில்லை. உபயம் காங்கிரஸ். ஆனாலும், நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக முடியுமா என்று தி.மு.க.,வில் கேள்விகள் எழுந்தாலும், எதைச் சொல்லி வெளியே வருவது? என்ற கேள்வி எழுந்துள்ளது."கனிமொழி விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கு, காங்கிரசை குறை சொன்னால் மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ராஜிவ் கொலையாளிகள் அல்லது கூடங்குளம் விவகாரத்தில் வெளியேறினாலாவது மக்கள் ஒத்துக் கொள்வார்கள். அப்படியே வெளியே வந்தால், மத்திய அரசு கவிழும். தேர்தல் வரும். அப்போது, தனியே தேர்தலில் போட்டியிட வேண்டியிருக்கும். எங்கள் நிலை என்னாகும். காங்கிரஸ் தோற்று, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், பழி எங்கள் மீது தான் விழும். நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் தான் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது என்று கூறுவார்கள்' என்கின்றனர் சீனியர் தி.மு.க.,வினர்.இப்படி சிக்கலாக உள்ளதால், தலைவர் தவித்துக் கொண்டிருக்கிறார் என்கிறது டில்லி தி.மு.க., வட்டாரம். தி.மு.க., குடும்பத்தினரிடமிருந்து போன் வந்தாலே, அது, கனிமொழி விவகாரமாகத்தான் இருக்கும் என்று போனை எடுக்கவே பயந்து கொண்டிருந்த தி.மு.க., மத்திய அமைச்சர்கள், ஜாமின் கிடைத்தால் பிரச்னை முடியும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், முடியவில்லை. இனிமேல் எங்கள் நிலை அதோ கதி தான் என்று நொந்து போயுள்ளனராம் தி.மு.க., அமைச்சர்கள்.
காங்கிரஸ் கட்சித் தலைவராகிறார் ராகுல்? சோனியா உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் இருந்தபோது, மத்திய அரசுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டன. "2ஜி' விவகாரத்தில் பிரணாப் - சிதம்பரம் தகராறு... பலவித ஆவணங்கள் வெளியாகின. இந்த பிரச்னைகள் தொடர்ந்து வருவதால், சோனியா, பல அதிரடி முடிவுகளை, விரைவில் எடுக்க உள்ளார் என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகின்றன. சமீபத்தில், காங்கிரசின் கூட்டணிக் கட்சி முக்கிய பிரமுகர்களை சோனியா சந்தித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பிரபுல் படேல், திரிணமுல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி ஆகியோர் சோனியாவை சந்தித்துள்ளனர். பிரதமரை மாற்றுவது குறித்து இவர்களோடு பேசியுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றன. அப்படியே பிரதமர் மாறினால், யார் பிரதமராக வருவார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால், பிரதமரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளிநாட்டு பயணத்தில் உள்ளார். இதோடு ராகுலை காங்., கட்சியின் தலைவர் பதவியில் அமர்த்த சோனியா திட்டமிட்டுள்ளார். தலைவர் பதவியிலிருந்து சோனியா விலகி, ராகுலை அங்கு அமர வைக்க, காங்கிரசின் காரியக் கமிட்டி கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் செய்திகள் அடிபடுகின்றன.
அன்னாவின் உண்ணாவிரதத்தை தடுக்க பலே முயற்சி; லோக்பால் மசோதா, பார்லிமென்டில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவில்லையென்றால், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதம் 22ம் தேதி, பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டால், டில்லியில் பிரச்னை ஏற்படும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அதோடு அனைத்து மீடியாக்களும், அன்னா ஹசாரேவின் பின்னாலேயே போகும். இதையெல்லாம் தடுக்க மத்திய அரசு, திரை மறைவு வேலைகளை மேற்கொண்டு வருகிறது. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் டில்லியில் இருக்கக் கூடாது... வேறெங்காவது நடக்கட்டும் என்று மத்திய அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அமைச்சர், இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உதவி செய்வதற்காக திக் விஜய் சிங், தினத்திற்கு ஒன்றாக, அன்னா ஹசாரேவிற்கு எதிராக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment