தேர்தலில் போட்டியிடுவோர் மட்டும் தான், ஊழலைப் பற்றி பேச வேண்டுமா,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேயை, மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், நேற்று முன்தினம் கடுமையாக சாடியிருந்தார். "அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் அரசியலில் சேர விரும்பினால் சேரலாம். அரசியலில் சேராமல் ஒதுங்கி இருந்து கொண்டு, ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ செயல்படுவதை, அவர்கள் கைவிட வேண்டும். தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா, இல்லை எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவிக்கப் போகிறீர்களா என்பதை வெளிப்படையாக கூறுங்கள்' என, சவான் கேட்டிருந்தார். இதற்கு, அன்னா ஹசாரே நேற்று அளித்த பதிலில், "தேர்தலில் போட்டியிட்டால் தான், ஊழல் பற்றி பேச வேண்டுமா? அப்படியானால், நாட்டில் உள்ள, 120 கோடி மக்களும், தேர்தலில் போட்டியிட்ட பின்னர் தான், ஊழலை விமர்சிக்க முடியுமா? "அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடத் தான் செய்கின்றனர். ஆனால், அவர்களால் ஊழலை ஒழிக்க முடியவில்லையே. கடந்த, 62 ஆண்டுகளாக, ஊழலை ஒழிக்க, அரசியல்வாதிகளால் சட்டம் கொண்டு வர முடியவில்லையே' என, கூறியுள்ளார்.
அமைதியாக இருங்கள்: மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், "லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சட்ட நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அரசு ஊழியர்கள் அனைவரும், மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். "நீதித்துறை மற்றும் மீடியாக்களுக்கு விலக்கு அளிக்க, திட்டமிடப்பட்டுள்ளது. லோக்பால் மசோதா குறித்து குரல் எழுப்பி வருவோர், மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்' என்றார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறுகையில், "ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு தேவை என, அதிகாரப்பூர்வமாக யாரும் எங்களிடம் கேட்கவில்லை. எங்களுக்கும், அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளவர்களுக்கு, எந்த தடையும் நாங்கள் விதிக்கவில்லை' என்றார்.
No comments:
Post a Comment