இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய நபரான யாசின் பக்தல் என்கிற இம்ரான் பற்றி தகவல் தருவோருக்கு ரூ. 15 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தில்லி போலீசார் அறிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 பாகிஸ்தானியர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான இம்ரான் தப்பியோடிவிட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தில்லி போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இவரைப் பற்றி துப்பு தருவோருக்கு ரூ. 3 லட்சம் வெகுமதி அளிக்கப்டும் என அறிவிக்கப்பட்டது. 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட பிறகு, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத செயல்களுக்கு இம்ரான்தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பத்கல் என்ற இடத்தைச் சேர்ந்தயவ் யாசின். 2007-ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கி பயிற்சி பெற்றுள்ளார் யாசின். தனது சகோதரர் இக்பால்,ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் சுற்றியுள்ளார். பின்னர் அங்கிருந்து புணேக்குச் சென்று, அங்கிருந்து செயல்பட்டுள்ளனர். 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி சித்திக், யாசின் ஆகியோர் குண்டு வைத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக யாசின் மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர, இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 2010-ல் ஜெர்மன் பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இவருக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கின்றனர். தில்லியில் ஜும்மா மஸ்ஜித்துக்கு வெளியே செப்டம்பர் 19, 2010-ல் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் தைவான் ஊடகத்தின் மீது நடத்திய தாக்குதலில் இவருக்கு தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்திய முஜாஹிதீன்கள் செயல்பாடுகளுக்குத் தேவையான நிதி, பொருள்கள் விநியோகம் உள்ளிட்டவற்றை யாசின் மேற்கொண்டதாக போலீசார் கருதுகின்றனர். 2008-ம் ஆண்டு தில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குப் பிறகுதான் யாசினின் பெயர் போலீசாரின் குற்றப் பட்டியலில் அதிகம் பதிவானது.
விசாரணை: இதனிடையே கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடத்த மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) போலீசார் முடிவு செய்துள்ளனர். ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் தில்லிக்குச் சென்றுள்ளனர். புணே, பெங்களூர், தில்லி ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment