|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி 8.4%லிருந்து 6.9% ஆக சரிந்தது!


இந்தியப் பொருளாதார கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும் பண வீக்கமும், மிக அதிகமான வட்டி விகிதங்களும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை பெருமளவில் சரியச் செய்துள்ளன. செப்டம்பர் வரையிலான கடந்த 3 மாத காலத்தில், நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் (GDP) வளர்ச்சி 6.9 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இரும்பு, சிமெண்ட், நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 7.2 சதவீதமாக இருந்த இந்தத் துறையின் வளர்ச்சி 2.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 16 சதவீதத்தை இந்தத் துறை தான் பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, சந்தையில் உள்ள நிதியைக் குறைக்க வங்கிகளின் வட்டி விகிதங்களை அதிகரித்தது. ஆனால், வட்டி விகிதங்கள் மிகவும் அதிகரித்துவிட்டதால், வீடுகள் கட்டுவதும், வாகனங்கள் வாகனங்குவதும் குறைந்துவிட்டது. கட்டுமானப் பணிகள் குறைந்துவிட்டதால் இரும்பு, சிமெண்ட் உற்பத்தியும் குறைக்கப்பட்டுவிட்டது. அதே போல வாகனங்களின் விற்பனை குறைந்துவிட்டதால், இரும்பு உற்பத்தியும் குறைக்கப்பட்டுவிட்டது.

கடந்த 2010-11ம் ஆண்டில் 8.5 சதவீத வளர்ச்சியைக் காட்டிய இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 3 மாதங்களில் 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இந்தியப் பொருளாதாரத்தையும் தாக்கும் என்பதால், அடுத்த சில ஆண்டுகள் இந்தியாவுக்கு பெரும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக 2012ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக தாக்குப் பிடிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இது 6.9 சதவீதமாக சரியும் என்று மோர்கன் ஸ்டான்லி சர்வதேச நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...