பிரிட்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தை 48 மணி நேரத்துக்குள் மூட இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது.மேலும் ஈரானின் தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5வது இடத்தில் உள்ள ஈரான், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட பல ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இங்கிலாந்தும் பொருளாதாரத் தடையை விதித்தது. இதை எதிர்த்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.
அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்குள் புகுந்து சூறையாடினர். மேலும், இங்கிலாந்தின் யூனியன் ஜேக் கொடியை இறக்கி தீ வைத்து எரித்ததோடு இமாம் ஹூசேனின் கொடியை ஏற்றினர். தூதரகத்தில் இருந்த இங்கிலாந்து ராணியின் படம் மற்றும் அரச கிரீடம் போன்றவற்றையும் வெளியே தூக்கி வந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் வருத்தம் தெரிவித்த போதிலும், இங்கிலாந்து அரசு அதை ஏற்கவில்லை. இதுபோன்ற செயல்கள் நீடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான உறவில் கடுமையான சிக்கல்கள் ஏற்படும் என்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்திருந்தார். இந் நிலையில், ஈரான் நாட்டில் உள்ள அனைத்து இங்கிலாந்து தூதரகங்களையும் மூடவும் கேமரூன் உத்தரவிட்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இங்கிலாந்து திரும்பி வருகின்றனர்
இதைத் தொடர்ந்து லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்தையும் மூட இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது. ஈரானின் தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தூதரகத்தில் 18 ஈரானிய அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைத் தொடர்ந்து நார்வேயும் ஈரான் நாட்டில் உள்ள தனது தூதரகத்தை தாற்காலிகமாக மூடியுள்ளது. ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகியவை தங்களது தூதர்களை திரும்ப அழைத்துள்ளன. இந் நிலையில் ஈரான் மீது மேலும் புதிய தடைகளை விதிப்பது குறித்து ஆலோசிக்க இன்று ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடி விவாதிக்கவுள்ளனர். ஈரானிய கச்சா எண்ணெய்யை வாங்குவதை முழுமையாக தவிர்ப்பது குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர். இதன்மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்க திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment