மாநிலம் முழுவதும் சத்துணவு மையம், குழந்தைகள் நல மையம், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 28 ஆயிரத்து 596 பணியிடங்களை உடனடியாக நிரப்ப முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் குழந்தைகள் மையங்களில் மின் விசிறி மற்றும் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தரவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோர் இடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதனை அகற்றி, ஊட்டச்சத்து குறைபாடற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணி திட்டத்தின்கீழ் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2002ம் ஆண்டு செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு, ஊட்டச்சத்து குறைபாடற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில், ஒரு புதிய கொள்கை வெளியிடப்பட்டது.
பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஒய்வூதியம் பெறும் முதியோர் உள்ளிட்ட 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறும் குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும்; மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்; பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
கட்டமைப்பு மேம்பாடு அந்த வகையில், சொந்தக் கட்டடங்களில் செயல்படும் சிறிய பழுதுகள் உள்ள 10,372 மையங்கள் மற்றும் பெரிய பழுதுகள் உள்ள 7,449 மையங்கள், ஆக பழுதுபட்டுள்ள மொத்தம் 17,821 மையங்களை 47 கோடியே, 61 லட்சம் ரூபாய் செலவில் பழுது நீக்கி சீரமைக்க முதலமைச்சர் நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், இம் மையங்களில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக, அவர்கள் கோடைக் காலத்தில் வெப்பத்தினாலும், குளிர் காலத்தில் போதிய வெளிச்சமின்மையாலும் அவதிப்படாமல் இருக்கும் வகையில் 27 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் 45,345 குழந்தைகள் மையங்களில் உட்புற மின் கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்துவதுடன் மின்விசிறி மற்றும் மின் விளக்கு ஆகியவைகளை பொருத்துவதற்கும் முதலமைச்சர் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்கள்.
குழந்தைகள் கழிப்பறை இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசு காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணும் வண்ணம், குழந்தைகள் இளம் வயதிலேயே கழிப்பறைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், 23 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் 29,727 குழந்தை மையங்களில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான கழிப்பிடங்களை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில் குழந்தைகளுக்கு புரதச் சத்துமிக்க சத்துணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெறவும், தாய், சேய் நலம் காக்கும் பணிகள் செம்மையாக நடைபெறவும், பணியாளர் நியமனம் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள 4,373 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 5,717 சத்துணவு சமையலர் பணியிடங்கள் மற்றும் 6,703 சமையல் உதவியாளர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 4,689 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 1,168 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் மற்றும் 5,946 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள், ஆக மொத்தம் 28,596 பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment