டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 18ஆம் தேதி வந்த 15 வயதுமிக்க இளம்பெண் ஒருவர், தனது மகள் என்று கூறி 2 வயது பெண் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும் அந்த பெண் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உடலில் மனிதர்கள் கடித்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன. தலைப் பகுதியில் பலத்த காயம் இருந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்போது அந்த குழந்தை கோமா நிலையில் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நரம்பியல் மருத்துவர் சுமித் சின்கா, சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது மிக மோசமான கட்டத்தில் இருந்தாள். உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. தலையில் பலமான பெரிய காயம் இருந்தது. இங்கே கொண்டு வந்தபோது கோமா நிலையில் இருந்தாள். நாங்கள் சி.டி. ஸ்கேன் எடுத்துள்ளோம். மூளையில் பெரிய காயம் இருந்தது. உடனடியாக அவளுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்துள்ளோம் என்றார்.டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குழந்தையை தத்தெடுத்ததாக, அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார். இளம் பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். எனவே குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டுபிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குழந்தையின் படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment