|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

ஒரே ஒரு அரிசி 1000 ரூபாய்! ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும்!

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வடமதுரை, நத்தம், சாணார்பட்டி ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த சில ஆண்டுகளாக சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.16 ஆண்டுகளுக்கு முன் சிறுமலையில் மான்கள், கேளை ஆடுகள் மற்றும் அரிய வகைக் குரங்களை சமூகவிரோதக் கும்பல் வேட்டையாடி வெளிமாவட்டங்களில் விற்பனை செய்து வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் நவரத்தின கற்களை குறைந்த விலையில் தருவதாக கூறி போலி கற்களை விற்பனை செய்து வந்தனர்.

இதனால் பணத்தை இழந்தோர் திண்டுக்கல் தாலுகா, வடமதுரை, நத்தம், சாணார்பட்டி காவல்நிலையங்களில் புகார் செய்தனர்.  இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை சேர்ந்த பலரை கைது செய்தனர்.சமூக விரோத கும்பல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ குணம் கொண்ட மணியன் பாம்பு இருப்பதாக பலரை ஏமாற்றி பணம் பறித்தனர். சில மாதங்களுக்கு முன்பு கை, கால்கள் செயல் இழந்தவரை வலம்புரிசங்கு, நாகக்கல் மூலம் குணப்படுத்தமுடியும் என கூறி பணம் பறித்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஒரு கும்பல் ‘பூஜை அரிசி’ என்ற பெயரில் நூதன மோசடியை ஆரம்பித்துள்ளது. ஒரே ஒரு அரிசியின் விலை ரூ.1000 எனவும், இந்த அரிசியை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பொங்கும், வியாபாரம் பெருகும், குழந்தைகளுக்கு கல்வி அறிவு வளரும் என கூறி வருகின்றனர். இதை நம்பி பலரும் ஏமாந்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுப்புராஜ் கூறுகையில், திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள நத்தம், வடமதுரை, சாணார்பட்டி பகுதிகளில் தொடர்ந்து நூதனமோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக விரோத கும்பலால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். 

பணத்தை இழந்த ஒரு சிலரே புகார் கொடுக்கின்றனர். பலர் குடும்ப கவுரவத்திற்காக காவல்நிலையங்களில் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி சமூக விரோதக் கும்பல் ஏராளமானோரை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. இவர்கள் மீது மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார். இதுகுறித்து திண்டுக்கல் எஸ்பி ஜெயசந்திரன் கூறுகையில், “இதுபோன்ற புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...