வங்கக்கடலில் கன்னியாகுமரி பகுதியில் புதிய காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை
நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 200
மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தென்மேற்கு
ஆந்திர கடற்கரை வரை கடந்த 2 நாள்களாக நீடித்திருந்தது. இதனால் கடற்கரை மாவட்டங்கள்,
புதுவையின் பெரும்பாலான இடங்கள், தமிழகத்தின் உள்பகுதியில் பெரும்பாலான இடங்களில்
மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் கன்னியாகுமரி பகுதியில் உருவாகியுள்ள புதிய
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை
வெள்ளிக்கிழமையும் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
வானிலை முன்னறிவிப்பு: கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான புதிய
காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது
வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும்
புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். உள்
தமிழகத்தில் அனேக பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும். ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில்...தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டுவிட்டு
கனமழை பெய்யும். அவ்வப்போது தரைக்காற்று வேகமாக வீசும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: கன்னியாகுமரி பகுதியில் உருவான காற்றழுத்தத்
தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், கடல் கொந்தளிப்புடன்
காணப்படும். இதனால் தென் தமிழகம், லட்சத்தீவு, கேரள மாநில பகுதியைச் சேர்ந்த
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: காரைக்காலில் தொடர்ந்து 5-வது நாளாக
வெள்ளிக்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுமார் 2,000 மீனவர்கள்
கடலுக்குள் செல்லவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பிற
பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): முத்துப்பேட்டை 180, கொள்ளிடம் 170,
காட்டுமன்னார்கோவில் 160, மரக்காணம், பட்டுக்கோட்டை 150, சிதம்பரம்,
பரங்கிப்பேட்டை, கடலூர் 140, பேராவூரணி, தொண்டி, சேத்தியாத்தோப்பு, திருவாரூர்,
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மீனம்பாக்கம் 100, சென்னை டிஜிபி அலுவலகம்,
விருத்தாசலம், பண்ருட்டி 90, சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம், கள்ளக்குறிச்சி 70.
காஞ்சிபுரம், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், விழுப்புரம், ஒரத்தநாடு, ஆரணி
60, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, முதுகுளத்தூர்,
செய்யாறு, பெரம்பலூர், லால்குடி, சமயபுரம், காரைக்குடி, அருப்புக்கோட்டை 50,
சிவகங்கை, வந்தவாசி, கமுதி, கடலாடி, புதுக்கோட்டை 40, செங்குன்றம், பொன்னேரி,
பூந்தமல்லி, பாம்பன், ராமேஸ்வரம், வாணியம்பாடி, மருங்காபுரி, சாத்தூர், சிவகாசி,
திண்டுக்கல், நத்தம், திருச்சி 30, திண்டிவனம், பாபநாசம், கொடைக்கானல், விருதுநகர்,
திருச்சுழி, மதுரை, சோழவந்தான், கோவில்பட்டி 20, ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை,
ராஜபாளையம், வேடசந்தூர், பாடலூர், கரூர், ஏற்காடு 10 என தமிழகத்தில் பெரும்பாலான
இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment