2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும்
உறவினர்கள், கோர்ட்டுக்குள் இனி மொபைல் போன்களை பயன்படுத்தினால், அவை
பறிமுதல் செய்யப்படும்' என, நீதிபதி ஓ.பி.சைனி எச்சரித்துள்ளார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை, டில்லி பாட்டியாலாவில் உள்ள
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. நீதிபதி ஓ.பி.சைனி இந்த
வழக்கை விசாரித்து வருகிறார். விசாரணை நடக்கும்போது, இந்த வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் கோர்ட் அறையில் ஆஜராகி
விடுகின்றனர். இதனால், கூச்சல் அதிகரிப்பதால், விசாரணை பாதிக்கப்படுகிறது.
கடந்த 23ம் தேதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர்கள்
ஐந்து பேருக்கு, சுப்ரீம் கோர்ட் ஜாமின் அளித்தது. இந்த தகவலை கேட்டதும்,
பாட்டியாலா கோர்ட்டில் கூடியிருந்தவர்கள், உற்சாகக் குரல் எழுப்பினர்.
இதனால், விசாரணை பாதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்
ஒருவர் மொபைல் போனில் பேசியதால், நீதிபதி ஓ.பி.சைனி எரிச்சல் அடைந்தார்.
அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். நேற்றைய விசாரணையின்போதும், இந்த இடையூறு
தொடர்ந்தது. இதுகுறித்து நீதிபதி சைனி கூறியதாவது: விசாரணையை பார்ப்பதற்காக,
குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் கோர்ட் அறைக்கு வருகின்றனர். இன்று
கூட, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மனைவி, கோர்ட் நடவடிக்கைகளை மொபைல்
போனில் படம் பிடித்தார். இது போன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இது,
கோர்ட் ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயல். விசாரணை நடக்கும் போது, இனிமேல்
யாரும் மொபைல் போன், லேப்-டாப், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மீறி
பயன்படுத்தினால், அவர்களிடம் இருந்து இந்த கருவிகள் பறிமுதல்
செய்யப்படும். இவ்வாறு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment