|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2011

மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு டெண்டர் திறப்பு!

பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்த வெளியிடப்பட்ட டெண்டரில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு 499 ரூபாயை பிரிமியம் தொகையாக குறிப்பிட்டுள்ளது. எனவே, இத்தொகை குறித்து இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.

"கலைஞர் மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு' மாற்றாக, புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அ.தி.மு.க., அரசு அறிவித்தது. இத்திட்டத்தின்படி, நான்கு ஆண்டுகளில், நான்கு லட்சம் ரூபாய்க்கு, ஒரு குடும்பம் மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும், முந்தைய மருத்துவக் காப்பீடு திட்டம் போல், 400 வகையான சிகிச்சைகளுக்கு என்றில்லாமல், 900 வகையான சிகிச்சைகளை இதில் பெற்றுக் கொள்ளலாம்."முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டம்' என்ற இத்திட்டத்துக்கு, கடந்த ஜூலை மாதம் டெண்டர் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட டெண்டரில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், மிகக் குறைந்த தொகையாக, ஆண்டுக்கு 510 ரூபாய் என பிரிமியம் தொகையை குறிப்பிட்டிருந்தது. ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடன் தமிழக அரசு, மூன்று சுற்று பேச்சு வார்த்தை நடத்தியது. அதில், 508 ரூபாய் வரை, அந்நிறுவனம் இறங்கி வந்தது. எனினும், இந்த தொகை கட்டுப்படியாகவில்லை என்று கூறி, தமிழக அரசு அந்த டெண்டரையே ரத்து செய்தது.

புதிய டெண்டர், குறுகிய கால அளவில் வெளியிடப்பட்டது. இதில், பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடந்த 21ம் தேதி டெண்டர் தேதி முடிந்ததும், தொழில்நுட்ப டெண்டர் திறக்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த, நான்கு பொதுத் துறை நிறுவனங்களின், விலை டெண்டர் நேற்று திறக்கப்பட்டது.இதில், குறைந்தபட்ச தொகையாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு 499 ரூபாய் என பிரிமியத் தொகையை குறிப்பிட்டுள்ளதாக, இன்சூரன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தொகையை மேலும் குறைப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இறுதி தொகை முடிவு செய்யப்படும்.இதையடுத்து, யுனைடெட் இந்தியா நிறுவனத்துக்கு, தமிழகத்தில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்படுமென, இன்சூரன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...