கூடங்குளத்தை மேம்படுத்த ரூ. 200 கோடி செலவில் தொலைநோக்குத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 11 அம்சத் திட்டத்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார். கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வ நடத்திய அப்துல் கலாம் அதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கழிவு நீரால் பாதிப்பில்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கடல் நீரின் வெப்பத்தை விட 5 டிகிரி சென்டிகிரேடு கூடுதலாக இருக்கும். ஆனால், இது 7 டிகிரி வரை இருக்கலாம். இதனால், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது. இந்த சோதனையை 7 பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்து கடலில் கலக்கும் அணுஉலையின் நீரால் எந்த வித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்துள்ளன.
மீன்வளம் பாதிக்கப்படாது: தாராப்பூர், கல்பாக்கம் அணுஉலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அதனால், மீன்வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுநீரினால் மீன்வளத்திற்கு பாதிப்பு ஏற்படாது. மீன்வளம் குறையாமல் இருக்க பாதாள சாக்கடை கழிவுநீரினை சுத்தப்படுத்தித்தான் கலக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.
தொலைநோக்குத் திட்டம்: கூடங்குளத்திற்கு ஒரு தொலைநோக்கு திட்டமும் உடனடியாக தேவைப்படுகிறது. 2015-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அந்த பகுதி கடற்கரையோரம் உள்ள கிராமப்புறங்கள் அடங்கிய அதாவது, 50, 60 கிராமங்களை ஒருங்கிணைத்த, குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு `புரா' திட்டத்தை (கிராமப்பகுதிகளில், நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தித்தரும் திட்டம்) ரூ.200 கோடி செலவில் அமல்படுத்த வேண்டும்.
இந்த சிறப்பு திட்டத்தில் அமல்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள்:
- கூடங்குளத்தில் இருந்தும் மற்றும் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிராமங்களில் இருந்தும் திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் செல்லும் நான்குவழி சாலைக்கு செல்ல 4 வழித்தடம் கொண்ட சாலைகள் அமைக்க வேண்டும்.
- 10 ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் 30 முதல் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வங்கிக்கடன் வசதி ஏற்பாடு செய்து 25 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கூடங்குளம் பகுதி கடற்கரையோர மக்களுக்கு தேவையான பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக கூடங்கள், விளையாட்டு திடல்கள் மற்றும் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மீனவ மக்களுக்கு தேவையான விசைப்படகுகள், படகு குழாம்கள், மீன்களை பதப்படுத்தும் மையங்கள், குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து கொடுக்க வேண்டும்.
- தினமும் கடல் நீரில் இருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீரை சுத்திகரித்து அங்கு வாழும் மக்களுக்கு வழங்க வேண்டும்.
- விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 500 படுக்கைகள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். அதில் அனைத்து கிராமங்களுக்கும் டெலிமெடிசின் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
- தமிழக அரசின் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட 5 பள்ளிகளை அமைத்து தரமான கல்வியை கொடுக்க வேண்டும்.
- எல்லா கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி, பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்த வேண்டும்.
- உடனடியாக பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை நிலையம் ஒன்றை அமைத்து, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.- மக்களுக்கும், அணுமின் நிலையத்திற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி மக்கள் குழுக்களை அமைத்து ஒரு சமூக நல்லிணக்கத்தையும், பொருளாதார மேம்பாட்டை அடையவும், பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளை செய்யவும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும். - ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து மேற்படிப்பு படிக்கவைத்து நிரந்தர வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment