நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கான அந்தஸ்து இன்றி, 44 பல்கலைக் கழகங்கள் செயல்படுகின்றன என்ற, நிபுணர் குழுவின் அறிக்கை உண்மையானதே' என, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட ஆய்வுக் கமிட்டி தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், பெரும்பாலான பல்கலைக் கழகங்கள், போதிய கட்டமைப்பு வசதியின்றி செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, பேராசிரியர் டாண்டன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு, நாடு முழுவதும் செயல்படும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை அளித்தது. இதன்படி, 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், போதிய கட்டமைப்பு வசதியின்றி செயல்படுவதாகவும், இவை, நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து இன்றி, கல்லூரி போல் செயல்படுவதாகவும் கூறப்பட்டது.நிகர்லை பல்கலைக் கழகங்களுக்கு யு.ஜி.சி., வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, இவை செயல்படவில்லை என்றும், போதிய பயிற்சி பெறாதவர்கள் பேராசிரியர்களாகச் செயல்படுவதாகவும், பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போதிய தகுதியுடையவர்களுக்கு பதிலாக, குடும்ப உறுப்பினர்களே நிர்வாகப் பொறுப்பை கவனித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த 44 பல்கலைக் கழகங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கான அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்த நிபுணர் குழு அறிக்கை அளித்தது.இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, அசோக் தாகூர், சின்கா, எஸ்.கே.ராய் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தற்போது தன் அறிக்கையை, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த 44 பல்கலைக் கழகங்களும், நிகர்நிலை பல்கலைகளுக்கான அந்தஸ்து இன்றி செயல்படுகின்றன என்றும், இவற்றில், போதிய கட்டமைப்பு உள்ளிட்ட தர வசதிகள் இல்லை என்றும், நிபுணர் குழு அளித்த அறிக்கை உண்மையானது தான். இந்த நிகர்நிலை பல்கலைகள், யு.ஜி.சி., வரையறுத்த விதிமுறைகளுக்கு பொருத்தமாகச் செயல்படவில்லை. இவற்றில் பெரும்பாலான பல்கலைகள், தாங்கள் வெறும் கல்லூரிகளாகச் செயல்படுவதாகவும், சம்பந்தப்பட்ட மாநில பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் பெற்று செயல்படுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளன. புதிய பாடத் திட்டங்களைத் துவக்குவதற்கோ, பிஎச்.டி., தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை துவக்குவதற்கோ, தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் இவை தெரிவித்துள்ளன. எனவே, இந்த 44 பல்கலைகளும், நிகர்நிலை பல்கலைகளுக்கான போதிய தரம் இன்றி செயல்படுகின்றன என்ற, முந்தை நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து, மாறுபடுவதற்கான காரணம் எதுவும் இல்லை.இவ்வாறு அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment