|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 November, 2011

நோ' சொல்ல வேண்டியதற்கு கண்டிப்பாக 'நோ' சொல்லுங்கள்!


உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனஅழுத்தம் மனிதர்களுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது. மனஅழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது. மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை ஏற்படுத்துகிறது.

அழுத்தம் பலவிதம்: மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது,

தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கின்றனர் மருத்துவர்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதமாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது. இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்ப சூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள். ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கண்டிப்பாக நோ சொல்லுங்கள்: சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை ‘முடியாது’ என்று மறுத்து விடும் மனத் தெளிவு உள்ளவர்களை மன அழுத்தம் நெருங்குவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சனையிலிருந்து தப்ப முடியாது.

நேர்மறை எண்ணங்கள்: கவனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தத்தினால் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம். நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் அனைத்தையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலேச வைத்திருக்க வேண்டும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்தான் ‘இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..’ அல்லது ‘என்னை யாருக்கும் பிடிக்கவில்லை’ போன்ற சிந்தனைகளுக்குள் சிக்கி மன அழுத்தத்துக்குள் மாட்டிக்கொள்கின்றனர்.

அமைதியான சூழல்: ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

குழந்தையை பாதிக்கும்: தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயையும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக்காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலேசாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். நாம் செல்லும் அனைத்து பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால்தான் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும் என்பது உளவியலாளர்களின் அறிவுரை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...