முஸ்லிம்களுக்கு இருக்கும் ஐந்து முக்கியக் கடமைகளில் கடைசியாக ஹஜ் (புனிதப் பயணம்) வந்தாலும், இது மிக முக்கியமான கடமை. ஹஜ் எனும் கடமையை நிறைவேற்ற வேண்டி மக்கா செல்ல விழையும் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்களையும், அங்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறை களையும் கீழ்வருமாறு முறைப்படுத்தி சொல்லலாம்.
* இரண்டு புதிய வெண்ணிறத் துணிகள் (தையல் இல்லாதவை) வைத்துக் கொள்ள வேண்டும். இடுப்பில் கட்டிக் கொள்வதற்கு ஒன்று, மேலங்கியாக உடலை மறைக்க இன்னொன்று! இதற்கு, "இஹ்ராம்' என்று பெயர். தூய்மைக்கும், எளிமைக்கும் இவை அடையாளமாக இருக்கின்றன. பெண்கள், உடலை முழுமையாக மூடிக் கொள்ளும் வகையிலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
* இவ்வுடைகளுடன் இவர்கள், இறைவனுடைய அழைப்பை ஏற்று, அவனது புனித இல்லத்திற்கு தாம் விருந்தினராக செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில், மக்கா எல்லையை எட்டியதுமே, "வந்து விட்டேன் இறைவா... இதோ வந்து விட்டேன்...' என்று குரலெழுப்பிய வண்ணம் செல்கின்றனர். இதற்கு, "தல்பியா' என்று பெயர்.
* மக்கா சென்றடைந்ததும், அங்குள்ள இறை இல்லமாம் புனித கஅபாவைச் சுற்றி வலம் வருகின்றனர். இச்சுற்று கஅபாவை மையமாக வைத்து, இடப்புறமிருந்து வலப்புறமாக சுற்றி வருவதாகும். ஏழு சுற்றுகளுடைய இந்த செயலுக்கு, "தவாப்' என்று பெயர்.
* அடுத்து கஅபாவின் அருகிலுள்ள ஸபா, மர்வா என்ற இரு குன்றுக்களுக்கிடையே விரைந்து, அங்குமிங்கும் 7 தடவை சென்று திரும்புகின்றனர்.
* நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜிரா அம்மையார், தம் குழந்தை இஸ்மாயிலுக்கு, தாகம் தீர்க்க, தண்ணீரை தேடி பாலைவனப் பகுதியில் ஸபா, மர்வா என்கிற குன்றுகளுக்கிடையே ஓடினர். இறைவனின் கருணையால் அங்கே இஸ்மாயிலின் காலடியில் ஒரு நீருற்று உண்டானது. அது நிற்காமல் தண்ணீர் தொடர்ந்து பாய்ந்து வருவதை கண்ட ஹாஜிரா அம்மையார், அதை பார்த்து ஸம் ஸம் (நில்! நில்!) என்றார். அந்த நீருற்று தான், இன்று, "ஸம் ஸம்' கிணறாக திகழ்கிறது.
* வேக நடையை முடித்துக் கொண்டு, மக்காவிலிருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள மினா எனும் இடத்திற்கு, பிறை 8 அன்று ஹஜ் பயணிகள் வருகின்றனர். அங்கு ஒரு இரவை கழித்து விட்டு, மறுநாள் (பிறை 9) காலையில் அரபாத் மைதானத்திற்கு செல்கின்றனர். இவ்விடம் மினாவிலிருந்து 17 கி.மீ., தூரத்தில் உள்ளது.
* அரபாத்தில் உள்ள உயரமான குன்றில் பயணிகள் எல்லாரும் திரண்டு நின்ற நிலையில், இறைவனைத் துதிக்கின்றனர். இறைவனிடம் கையேந்தி, அழுது, தொழுது, பாவ மன்னிப்பு கேட்கின்றனர். தம்முடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர். இந்த நிகழ்வுதான் ஹஜ்ஜின் முக்கிய கட்டமாகும்.
* அன்று நாள் முழுக்க அரபாத்தில் கழித்து விட்டு, மாலை இருள் சூழும் நேரம் அங்கிருந்து விடைபெற்று, 14 கி.மீ., தூரத்தில் குன்றுகள் சூழ்ந்த முஸ்தலிபா என்ற இடத்தை வந்தடைகின்றனர்.
* அரபாத்தில் மக்கள் இரவை கழிக்கின்றனர். மறுநாள் அதிகாலை மீண்டும் மினா வருகின்றனர். இன்று தான் துல்ஹஜ் பிறை 10ம் நாள். (இன்று தான் உலகெங்கும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.)
* இப்பொழுது மினா வந்துள்ள பயணிகள், இங்கு சைத்தான் மீது கல் எறிதல் என்ற சடங்கை நடத்துகின்றனர். சின்ன, நடுத்தர, பெரிய சைத்தான்களைக் குறிக்கும் வகையில் மூன்று இடங்களில் மூன்று தூண்கள் நடப்பட்டுள்ளன. அவற்றை குறி வைத்து, பயணிகள் சிறு கற்களை வீசி எறிகின்றனர். இதற்கு, "ஜம்ராத்' என்று பெயர், இப்ராஹிம் (அலை) இஸ்மாயில் (அலை), ஹாஜிரா அம்மையார் ஆகிய மூவரையும் இறைக் கட்டளையை நிறைவேற்ற
விடாமல் தடுத்த சைத்தானை அவர்கள் கல்லெறிந்து விரட்டினர்.
* கல்லில் இருக்கும் சைத்தானை, கல்லால் அடிப்பவர்கள், தம் மனதில் இருக்கும் ஆணவம், சுயநலம், பேராசை போன்ற சைத்தான்களை மனதிலிருந்து எறிந்து விட்டு, புதிய மனிதர்களாக திரும்ப வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
* மினாவில் வைத்து தான் பிராணிகளை (ஆடு, மாடு, ஒட்டகம் பலியிடும்) குர்பானி என்ற சடங்கும், அதைத் தொடர்ந்து பயணிகள் (ஆண்கள்) தலைமுடி மழிப்பதும் அல்லது கத்தரிப்பதும் நடக்கிறது.
* அடுத்து, இவர்கள் மக்கா வந்து கஅபாவை மீண்டும் ஒருமுறை தவாப் செய்கின்றனர். இதற்கு, "தவாபே ஜியாரத்' என்று பெயர். அதோடு ஸஈயும் செய்து விட்டு, மீண்டும் மினா வந்து, பிறை 11, 12, 13 ஆகிய நாட்களில் விடுபட்டிருந்த சடங்குகளையும் முடித்துக் கொள்கின்றனர். இதனுடன் ஹஜ் புனிதப் பயணம் முழுமையாக நிறைவடைகிறது.
* இறுதியாக, மக்காவுக்கு திரும்ப வந்து, அங்கிருந்து புறப்படும் முன் கஅபாவில் கடைசியாக ஒரு தவாப் செய்கின்றனர். இதற்கு,
"தவாபுல்விதா' (விடை பெறும் சுற்று) என்று பெயர், இந்த நிகழ்வுடன் ஹஜ் என்கிற புனிதப் பயணத்தை முழுமையான மனநிறைவுடன் முடித்தவர்களாக பயணிகள் அனைவரும் தம்முடைய நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
No comments:
Post a Comment