கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப்தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பினரின் இந்த போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. "அணு உலையால் உயிருக்கே ஆபத்து' என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணிமுடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை பார்வையிட்டு, விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், நிருபர்களிடம் அப்துல் கலாம் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாம் தலைமுறைக்கான அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு மின்தடை ஏற்பட்டாலோ அல்லது குளிர்விப்பானில் தடை ஏற்பட்டாலோ, நீராவி மூலம் வெப்பம் குளிர்விக்கப்படும் தானியங்கி வசதி உள்ளது. இந்த வசதி, இந்தியாவிலேயே முதல்முறையாக இங்கு மட்டுமே உள்ளது. கதிர்வீச்சு அபாயமில்லை: அணுஉலையில் எரிபொருள் உருகி கீழே விழுந்தால், அதன்அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டி போன்ற அமைப்பு, அந்த எரிபொருளிலிருந்து கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யும். மேலும், கதிர்வீச்சு வெளியாவதை தடுப்பதற்காக, இரட்டை சுவர் முறையில் அணுஉலை நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கதிர்வீச்சு அபாயமும் இங்கில்லை. இந்த அணுஉலை பாதுகாப்பில் எனக்கு முழுதிருப்தியுள்ளது. ஏன் பயம்? அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கும், மத்திய அரசிற்கும், இப்பிரச்னையில் சமரசம் செய்வதற்கான தூதராக நான் இங்கு வரவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்ததன் காரணமாகவே இங்கு வந்துள்ளேன். இந்த அணுமின் நிலையத்தைப் பற்றி பொதுமக்கள் பயப்படவேண்டாம். எனக்கு பயிற்றுவித்த சிவசுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட ஆசிரியர்கள், எதிலும் குறைகாணக்கூடாது என்றே கூறியுள்ளனர். பொது விஷயங்களில், அதன்படியே நான் நடக்கிறேன்.
பாதிப்பு வராது: இங்கு யுரேனியத்தில் வரும் 25 சதவீத கழிவு, கடலில் கொட்டப்படாது. உலகளவில் அணுஉலையில் இதுவரை மொத்தம் ஆறு விபத்துகள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஒன்று கூட நடக்கவில்லை. ஆயினும், அதுபோலவோ அல்லது அதைவிட பெரிதாகவே விபத்து நடந்தாலும், இங்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெனில், கூடங்குளம் அணுமின் நிலையம், கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும், பூகம்பம் ஏற்படாத பாதுகாப்பான 2வது இடத்திலுள்ளது. இதனால், பூகம்பம், சுனாமியால் இந்த அணு மின் நிலையம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது.நெல்லை நெல்லையப்பர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதுபோலத்தான் தஞ்சை பெரியகோவிலும் கட்டப்பட்டது. அவை, இன்றும் நிலைத்து நிற்கின்றன. கடல் அலை அரிப்பால் ஆபத்து ஏற்படுமென நினைத்திருந்தால், கல்லணையை கரிகாலன் கட்டியிருக்க மாட்டார். எனவே, எல்லாவற்றிலும் நம்பிக்கைதான் நல்லது.
இங்கு என்னை சந்தித்த 15 கிராமங்களைச் சேர்ந்த 40 பேர், மின்சாரம் மிக முக்கியம். ஆகையால், இங்குமின் உற்பத்தியை விரைந்து துவக்க வேண்டும் என்றனர். நாங்கள், 1979ல் பி.எஸ்.எல்.வி., -3, ராக்கெட் தயாரித்தபோது, விபத்து ஏற்பட்டதில், எட்டு பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் என்னிடம் நிச்சயம், இந்த ராக்கெட்டை அடுத்தாண்டு விண்ணில் ஏவுவோம் என்றார். அதன்படி, ராக்கெட்டும் ஏவப்பட்டது. எனவே, நம்பிக்கை அவசியம். அதுபோல, இந்த அணுமின் நிலைய பாதுகாப்பையும் பொதுமக்கள் நம்ப வேண்டும்.புயல், சூறாவளி ஏற்பட்டாலும் இந்த அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தாண்டு, கடைசியில் இங்கு 1,000 மெகாவாட், அடுத்த ஆறு மாதத்தில் 2,000 மெகாவாட், அடுத்தபத்து ஆண்டில் 4,000 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தத்தில் கூடங்குளத்தை அணுஉலைப் பூங்காவாக மாற்றவேண்டுமென்பது எனது விருப்பம். இவ்வாறு அப்துல் கலாம் நிருபர்களிடம் கூறினார்.பேட்டியின் போது, இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.ஜெயின், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, அதிகாரிகள் உடனிருந்தனர். ரகசியமாக வைக்கப்பட்ட கலாம் வருகை :*பாதுகாப்பு கருதி அப்துல் கலாமின் கூடங்குளம் பயணம், நிகழ்ச்சி விவரம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது
*நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பிற்கு கலாம் வந்தார்
* நேற்று காலை சரியாக 9.30 மணியளவில், காரில் அணுமின் நிலைய வளாகத்திற்குள் நுழைந்தார். அவருடன், இந்திய அணுசக்தி கழகத்தலைவர் எஸ்.கே.ஜெயின் வந்தார்.
* அணுமின் நிலையத்தில் அதிகாரிகள், விஞ்ஞானிகளின் ஆலோசனை நடத்திவிட்டு, அணுஉலை 1, 2ஐ ஆய்வு செய்த கலாம், அணுமின் நிலைய ஆதரவாளர்களையும் சந்தித்தார்.
* அப்துல் கலாமிடம் பேட்டியெடுக்க தமிழ், ஆங்கிலம், மலையாள பத்திரிகை நிருபர்கள், "டிவி' நிருபர்கள் ஏராளமானோர் இங்கு குவிந்தனர்
*மதியம் 1.15 மணிக்கு நிருபர்களை சந்தித்த கலாம், முக்கால் மணி நேரம் பேட்டியளித்தார். அணுஉலை குறித்த நிருபர்களின் சரமாரியான கேள்விகளுக்கு, ஆசிரியர் போல் விளக்கமாக பதில் கூறினார்.
*பிரச்னை தவிர்ப்பதற்காக கூடங்குளம் அணுமின் நிலையம், சுற்றுப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* அணுஉலை ஆய்விற்கு கலாம் சென்றபோதும், அணு உலை ஆதரவாளர்கள் அவரை சந்தித்தபோதும், அதை படமெடுக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
"சந்ததிகள் வாழ கூடங்குளம் அவசியம் தேவை':கலாமிடம் நிருபர் ஒருவர், ""கனவு காணுங்கள் என்கிறீர்கள். தங்களின் எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டுமென்ற கனவில் தானே, போராட்டக்காரர்கள் இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கிறார்கள்,'' என, கேட்டார்.
இதற்கு பதிலளித்த கலாம்,"ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மின்சாரத்தின் தேவையை நன்கு அறிந்தவன் நான். எனவே, இப்பகுதி மக்களின் சந்ததிகள் சிறப்பாக வாழ இந்த அணுமின் நிலையம் அவசியம் தேவை. இங்கிருந்து, இந்தியா முழுமைக்கும் மின் சப்ளை செய்யும் நிலைமை வரவேண்டும். பொதுமக்கள் பயப்படுவதுபோல, இங்கு விபத்து நடக்காது,'' என்றார்.
அவசியம் இல்லை: மின்உற்பத்தியை துவங்க வலியுறுத்தி அணுமின் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை சந்தித்த கலாம், போராட்டக்கார்களை சந்திக்க செல்லவில்லை. இதுகுறித்து கலாமிடம் கேட்டபோது,"" இந்த அணுமின் நிலையம் குறித்து பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை. ஏனெனில், மின்தேவை நமக்கு அவசியம். அது முக்கியம். மின் உற்பத்தி துவங்க வலியுறுத்தி இங்கு என்னிடம் மனு கொடுக்க வந்தவர்களை நான் சந்தித்தேன். அதேபோல, போராட்டக்காரர்களும் இங்கு வந்தால் அவர்களையும் சந்திப்பேன். மாறாக, நான் அவர்களைத் தேடிச் சென்று சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களின் கருத்துக்களை என்னுடையapj@abdulkalam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்,'' என்றார்.
"இந்த அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்த என்னுடைய கருத்தை பொதுமக்களிடம் வெவ்வேறு வழிகளில் தெரிவிப்பேன். டில்லியில் நடக்கவுள்ள அணுசக்தி மாநாட்டிலும் இதுகுறித்து பேசுவேன். இந்த அணுமின் நிலையம், இப்பகுதி மக்களின் வரப்பிரசாதம். மக்களின் நல்வாழ்வுக்கு உழைப்பும், நல்லொழுக்கமுமே முக்கியம். இந்த அணுமின் நிலையத்தால் பொதுமக்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும்
No comments:
Post a Comment