தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக இந்தியாவிலிருந்து உரிய அனுமதி பெறாமல் ரூ. 1,650 கோடியை எடுத்துச் சென்றது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate-ED) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐபிஎல் 2 லீக் போட்டிகள் முதலில் இந்தியாவில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களையொட்டி இந்தப் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன.
இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 1,650 கோடியை தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு சென்றது. ஆனால், இதற்கு உரிய அனுமதியை கிரிக்கெட் வாரியம் பெறவில்லை. இதையடுத்து அன்னிய செலாவணி சட்டத்தின் (Foreign Exchange Management Act-FEMA) கீழ் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசின் நகல் ஐபிஎல் கமிஷ்னர் லலித் மோடிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான், பிசிசிஐ முன்னாள் தலைவர் சஷாங் மனோகர், ரவி சாஸ்திரி ஆகியோரிடமும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment