தென்தமிழ்நாட்டு மக்களுக்குப் பாசன நீரும், குடிநீரும் வழங்குகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவது என்று, கேரள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபடுகின்றது. புதிய அணை கட்டுவது என்ற பெயரால், தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, பல வழிகளிலும் களத்தில் இறங்கி உள்ளது. புதிய அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் கொடுக்க வாய்ப்புக் கிடையாது.
முல்லைப்பெரியாறு அணை, இந்தியாவிலேயே மிக வலுவானது. 200 அடிகள் அடிமட்ட அகலம் கொண்டது. அத்தகைய அடிமட்ட அகலம் கொண்ட அணை, இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது. 500 அடிகள் உயரத்தில், இடுக்கியில் கேரளம் கட்டி உள்ள அணையின் அடிமட்ட அகலம்கூட, 56 அடிகள்தான். ஆனால், கேரள மக்களுக்கு அச்சத்தை மூட்டி, முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் மனோநிலைக்கு அவர்களைத் தயார்படுத்த, முந்தைய அச்சுதானந்தன் அரசு செயல்பட்ட வழியிலேயே, இன்றைய உம்மண் சாண்டி அரசு ஈடுபட்டு உள்ளது. அதற்காக, இன்று கேரள அரசும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்பு நடத்துகின்றனர்.
இந்தப் பிரச்சினையில், தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு, தமிழகத்தின் உரிமையையும் நீதியையும் நிலைநாட்ட முனையாமல், ஓர வஞ்சகமாக, கேரளம் செய்யும் அக்கிரமமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டுகின்ற விதத்திலேயே செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டச் செய்து, அதன் விளைவுகளைக் காட்டி அணையை உடைக்கும் நோக்கத்தோடு, இன்று கேரளத்தில் நடைபெறுகின்ற போராட்டத்தில், பல இடங்களில் என்னுடைய உருவபொம்மையையையும் போட்டோவையும் போராட்டக்காரர்கள் எரித்ததோடு, "மரியட்டே மரியட்டே வைகோ மரியட்டே, சாகட்டும் சாகட்டும் வைகோ சாகட்டும்" என்று முழக்கங்களையும் எழுப்பி உள்ளனர். அத்துடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பழ.நெடுமாறன் ஆகியோரின் உருவ பொம்மைகளையும் எரித்து உள்ளனர். குறிப்பாக, குமுளி, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கட்டப்பனை, வெள்ளக்கடவு ஆகிய இடங்களில் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டபோது, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அருகில் இருந்து வேடிக்கை பார்த்து உள்ளனர்.
இதனை அறிந்து, பல இடங்களில் இருந்து வேதனையும், ஆத்திரமும் கொண்ட சகோதரர்கள், தங்கள் மனக்கொதிப்பைத் தொலைபேசியில் தெரிவிக்கின்றனர். எந்தக் காரணத்தை முன்னிட்டும், ஆத்திர உணர்ச்சிக்குத் தமிழக மக்கள் இப்போது இடம் கொடுத்து விடக் கூடாது. அப்படி ஆத்திரமூட்டுவதுதான், கேரளத்தினரின் திட்டம். தமிழகத்துக்கு வருகின்ற பேருந்துகள் மீதும் கல்வீசித் தாக்கிச் சேதப்படுத்தி உள்ளனர். பதிலுக்கு உருவ பொம்மை எரித்தலோ, பேருந்துகளுக்குச் சேதம் விளைவிப்பது போ ன்ற எந்தச் செயலிலும் தமிழக மக்கள் ஈடுபட வேண்டாம். முல்லைப் பெரியாறு அணையையும், தமிழகத்தின் உரிமையையும் காக்க, நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளவாறு, கேரளத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற பொருளாதார முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment