|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்...!


இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது; வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு வயதினரிடமும் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) எஸ். எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

"பேஸ்புக்' 'டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதன் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்களுடைய நண்பர்கள்,உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு பலர் "குட் பை' சொல்ல துவங்கிவிட்டனர்.சமூக வலைதளங்களில் தங்களின் விபரங்களை ஒருவர் பதிவு செய்யும் போது, தகவல்களுடன் சேர்த்து தங்கள் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். வலைதளங்கள் மூலம் ஒருவருடன் நண்பர்களாக வேண்டும் என்றால், தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்; மறுமுனையில் சம்பந்தப்பட்ட நபர் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இருவரும் வலைதளத்தில் நண்பர்களாகி கொள்ளவும், தங்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடவும், உறவுகளை இணைக்கும் பாலமாகவும் உதவி வரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவியருக்கு எதிரான சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

சமூக வலைதளங்களில் பெண்களின் பெயர்களை டைப் செய்தால், குறிப்பிட்ட பெயருக்கு 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த முழு விபரங்கள் போட்டோக்களுடன் வெளியிடப்படுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆசாமிகள், அறிமுகமில்லாத பெண்களுக்கு தாங்களாகவே, "நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என தெரிவிக்கும் தகவல்களை அனுப்புகின்றனர். தங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய வேண்டுகோளை ஏற்காமல் நிராகரிக்கும் பெண்கள் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். எனினும் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் நல்லவர்களை போல் சில நாட்கள் நடித்து அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். நாளடைவில் நேரில் சந்திப்பது, பொது இடங்களுக்கு சென்று வருதல், பண பரிமாற்றம் என துவங்கி, ஏமாறும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றியும், அவர்களிடமிருந்து பணம்,நகை, "லேப்டாப்' உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் சென்றுவிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பலர்,போலீசில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.

கோவை மாநகர சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கம்ப்யூட்டர்களில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தும்போது, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களின் அந்தரங்க தகவல்கள் குறித்து நெருங்கிய தோழிகளுடன் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். தனி அறையில் வைத்து அவர்கள் இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது' என்றனர். பெற்றோர், ஆசிரியர், உடன்பிறப்புகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் அறிவுரை ஒருபுறமிருந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும்போது பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...