|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

மீனவர் பிரச்னையில் இலங்கை இரட்டை வேடம் ஜெயலலிதா 5-வது கடிதம்!


தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையை கையாள்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்னையில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமருக்கு அவர் எழுதிய 5-வது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.  தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: 'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது மாநில மக்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, தங்களுக்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளேன்.

மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் அது தமிழகம் தொடர்பான பிரச்னை இல்லை; தேசிய அளவிலான பிரச்னையாக பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன். மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். நீங்கள் இலங்கை அரசுடன் பேசுகிறீர்கள். அவர்களும் அது தொடர்பாக உறுதி தருகின்றனர். ஆனால், மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

கடந்த 15-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பல்களில் வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் செல்வராஜ் என்கிற மீனவருக்கு தலையில் பலத்த ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலையில் இருந்து அதிகளவு ரத்தம் வந்ததையடுத்து மற்ற மீனவர்கள் அவரை கரைக்குத் தூங்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அடிக்கடி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால் மீனவ மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு இல்லாததாக உணர்வதாகவும், தாக்குதல் சம்பவங்களை மத்திய அரசு தடுக்காமல் இருப்பது பற்றியும் அவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்கிறது. எல்லை கடந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என ஒருபுறம் அறிக்கைகளை விட்டுக் கொண்டும், மறுபுறம் மீனவர்கள் மீது அந்த நாட்டின் கடற்படை தாக்குதல்களையும் நடத்தி வருவது தொடர்கிறது. தமிழக அப்பாவி மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சம்பவங்களை தொடராமல் இருக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் தாங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...