|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

நெரிசலை தீர்க்க முன்மாதிரி திட்டம்...!


சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு உடனடியாக வழி கிடைக்க மற்றும் விதிமீறும் வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில், சர்வதேச தரத்தில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை நகரில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில், 5,133 விபத்துகள் நடந்துள்ளன. இதைத் தவிர்க்க, சென்னை போலீசில், பல சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் போக்குவரத்து போலீசார், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பதற்கான, "இ-சலான்' முறை மற்றும் சாலை விபத்து கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். தற்போது, சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டின் இறுதியில், முதல்வர் ஜெயலலிதா, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், சிக்னல்கள், அங்குள்ள கேமராக்கள் அனைத்தும் போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். இதனால், சென்னை நகரின் போக்குவரத்து பிரச்னையும், போலீசாரின் பணிச்சுமையும் குறையும் எனக் கூறப்படுகிறது. திட்டத்தின் செயல்பாடுகள்: சிக்னல் கட்டுப்பாடு... : சென்னை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்த்து 270க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் இயங்குகின்றன. இதில், முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, தானியங்கி சிக்னல்களை நிறுத்தி, போலீசார், தேவைக்கேற்ப தாங்களே சிக்னல்களை இயக்கி வந்தனர். ஆனால், புதிய திட்டத்தின்படி, சிக்னல், அங்குள்ள கேமராக்கள் அனைத்தும் போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போலீசார், சம்பவ இடத்தைக் கண்டறிந்து, அங்கிருந்தபடியே சிக்னல்களை இயங்கச் செய்வர். இதனால், அந்த பகுதியை மட்டுமல்லாது, அடுத்தடுத்த சிக்னல்களையும் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியும்.

மேலும், சிக்னல்களில் அமைக்கப்பட்டிருக்கும் கேமராக்கள், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை படம் எடுத்து, கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும். இதற்காக, நம்பர் பிளேட் எண்களை கூர்மையாக படம் பிடிக்கும் கேமராக்களும், வேகமாகச் செல்லும் வானங்களை கண்டுபிடிப்பதற்கான சாப்ட்வேர் தொழில்நுட்பமும், கட்டுப்பாட்டறையில் பொருத்தப்பட உள்ளன. அவசர வாகனங்களுக்கு வழி... : போக்குவரத்து கட்டுப்பாட்டறையுடன், முக்கிய சிக்னல்கள் மற்றும் அவற்றில் உள்ள கேமராக்கள் இணைக்கப்படுவதால், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் ஒரு சிக்னலை கடக்கும் போது, அடுத்துள்ள சிக்னல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஒளிரும் திரை மற்றும் ஸ்பீக்கரில், இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும். உடனே, அங்கு பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி, ஆம்புலன்ஸ் உடனடியாகச் செல்ல வழி செய்வார்.

அடுத்த ஆறு மாதங்களில்... : அடுத்த ஆறு மாதங்களில், சென்னையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான டெண்டர், விரைவில் வெளியிடப்பட உள்ளது. கட்டுதல், இயக்குதல் தொடர்ந்து ஒப்படைத்தல் (பி.ஓ.டி.,) திட்டத்தின் அடிப்படையில், பொதுமக்கள், தனியார் பங்களிப்பின் கீழ் இத்திட்டம் அமலாகிறது. இதற்கான, பிரதான சர்வர் அமைப்பு, புதிய கமிஷனரக வளாகத்தில் அமையும். இத்திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனம், இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கட்டமைப்பு வசதிகளுக்கான இடம், போக்குவரத்து போலீசால் வழங்கப்படுகிறது. திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து, தனியார் நிறுவனத்திற்கு மாதந்தோறும் தொகை வழங்கப்படும். ஐந்தாண்டு இறுதியில், திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டமைப்பு அனைத்தும், சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வந்துவிடும்படி, இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தான் முதலில்... : திட்டம் குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது: வெளிநாடுகள் பலவற்றில், இதுபோன்ற போக்குவரத்து மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில், சென்னையில் தான், முதன் முதலில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது, கேபிள் மூலம் அல்லாமல், ஒயர்லெஸ் மூலம் இயங்கும் அமைப்பாக உருவாகிறது. இந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்புடன், சென்னையில் உள்ள போலீசாருக்கு, தேவைக்கேற்ப டிஜிட்டல் கேமராக்கள் வழங்கப்படும். இதன் மூலமும், வாகன ஓட்டிகளின் விதிமீறல் கண்காணிக்கப்படும். சரியான முறையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விதிகளை அமல்படுத்தவும், இத்திட்டம் வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று முறையில் அபராதம் வசூல்! : போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், "இ-சலான்' முறையில் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டத்தின் கீழ், 100 சிக்னல்களில் கேமரா பொருத்தப்படுகிறது. இதன் மூலம், விதிமீறல் குறித்து எடுக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய, "மெமோ' சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு, தபால் மூலம் அனுப்பப்படும். இது தவிர, முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் கையடக்க கருவிக்கு, அபராத கட்டணம் செலுத்தாத வாகன ஓட்டி குறித்த தகவல், வாகன எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும். சிக்னல்களில், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியை பார்க்கும் போது, அங்கேயே அவரை மடக்கி, அபராதத் தொகை பெறப்படும். புதிய திட்டப்படி, முதற்கட்டமாக, சென்னையில், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 100 சிக்னல்களில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...