தமிழகத்தில் மாமல்லபுரம், திருத்தங்கல், போடிநாயக்கனூர், பத்மநாபபுரம், திருத்துறைப்பூண்டி ஆகிய 5 இடங்களில் புதிதாக போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாலைப் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையிலும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவதைஉறுதி செய்தல் மற்றும் சாலை விதி முறைகளை கடைபிடிப்பதால் ஏற்படும் பயன்களையும், அவற்றை மீறினால் நேரும் இழப்புகளையும் மக்களிடையே எடுத்துச் செல்லுதல்; சாலை விதிகள் கடைபிடிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக காவல் துறையில் தனியே போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் மாநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 206 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையையும், மக்கள் பெருக்கத்தையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைடியும் கருத்தில் கொண்டு, போக்குவரத்து தொடர்பான காவல் பணிகளை மேலும் செம்மையாக செய்வதற்கு ஏற்ற வகையில் போதிய காவல் நிலையங்ளை முக்கிய நகர் பகுதிகளில் ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கலில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு போக்குவரத்து காவல் நிலையமும், ஆக மொத்தம் 5 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைத்திட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக 5 ஆய்வாளர்கள், 10 சார் ஆய்வாளர்கள், 15 தலைமை காவலர்கள், 15 கிரேடுஐ காவலர்கள், 30 கிரேடுஐஐ காவலர்கள், 5 கிரேடுஐஐ ஓட்டுநர்கள், ஆக மொத்தம் 80 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதி தற்போது விருகம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய கட்டுப்பாட்டு எல்லைக்குள் அமைந்துள்ளது. வளசரவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகள், போன்றவை பெருகி உள்ள காரணத்தால், இந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா வளசரவாக்கம் பகுதிக்கென தனியே ஒரு போக்குவரத்து காவல் நிலையத்தினை ஏற்படுத்த ஆணையிட்டுள்ளார்.
மேலும், பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டியுள்ள செம்மஞ்சேரி பகுதியில், பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் போக்குவரத்து பல்கிப் பெருகி உள்ளது. இதனால், போக்குவரத்து காவல் பணிகளை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தால், செவ்வனே செய்ய இயலவில்லை. இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா செம்மஞ்சேரி பகுதிக்கென ஒரு புதிய போக்குவரத்து காவல் நிலையத்தை ஏற்படுத்த உத்திரவிட்டுள்ளார்.
இக்காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக, 2 ஆய்வாளர்கள், 4 சார் ஆய்வாளர்கள். 6 தலைமை காவலர்கள், 6 கிரேடுஐ காவலர்கள், 12 கிரேடுஐஐ காவலர்கள், 2 கிரேடுஐஐ ஓட்டுநர்கள், ஆக மொத்தம் 32 புதிய பணியிடங்களை உருவாக்கிடவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும், 1 லட்சத்து 88 ஆயிரத்து 600 ரூபாய் தொடரா செலவினமும் கூடுதலாக ஏற்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment