|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

கடன் வாங்கி விட்டு "ஏப்பம்' விட்ட தொழிலதிபர்கள்?


பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாத, முதல் 100 தொழிலதிபர்களின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த, பி.பி.கபூர் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும்' என கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த ரிசர்வ் வங்கி, "வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர், விவரங்கள் எங்களிடம் உள்ளன என்பது உண்மையே. ஆனாலும், அவை ரகசிய ஆவணங்கள் என்பதால், பகிரங்கமாக வெளியிட முடியாது. அதை மீறி வெளியிட்டால், அது நாட்டின் பொருளாதார நலனை பாதிக்கும்' என, தெரிவித்து விட்டது.

இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்தின் கவனத்திற்கு, இந்தப் பிரச்னையை கபூர் கொண்டு சென்றார். அவரின் மனுவை விசாரித்த, தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும், முதல் 100 தொழிலதிபர்களின் பெயர் மற்றும் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். மேலும், தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 4ன்படி, இதுபோன்ற தொழிலதிபர்களின் முழுமையான விவரங்களை, ரிசர்வ் வங்கி, தங்களின் வெப்சைட்டில் டிசம்பர் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். அத்துடன் அந்தப் பட்டியலை ஆண்டுக்கு ஒரு முறை "அப்டேட்' செய்ய வேண்டும். வங்கிகள் ஒப்படைக்கும் ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, ரிசர்வ் வங்கிக்கு உண்டு என்றாலும், பெரிய அளவிலான இதுபோன்ற பொதுநலன் தொடர்பான விஷயங்களில், விதி விலக்குகளை காரணம் காட்டி, தகவல்களை வெளியிட மறுக்கக் கூடாது.இவ்வாறு சைலேஷ் காந்தி உத்தரவில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...