மக்கள் நலப் பணியாளர்களின் வேலை நீக்கத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை ஒரே நாளில் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் திமுக பொருளாளரும், இளைஞர் அணி பொறுப்பாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்துக்காக வட சென்னை, தென் சென்னையில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று காலை குவிந்தனர். ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் முத்துசாமி, சற்குணபாண்டியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவள்ளூரில் பஜார் வீதியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நீலகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் சிவாஜி, கும்மிடிப்பூண்டி வேணு, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் காவலாங்கேட்டில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடந்தது.
No comments:
Post a Comment