யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பபல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஷ்யாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் "இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - இலங்கை நட்புறவும்" என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான ஷ்யாம் சரண் உரையாற்றினார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம் மற்றும் அரச ஏராளமான ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர்கள் முற்றாகப் புறக்கணித்தனர். குறைந்தளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்களே கலந்து கொண்டனர்.
அவர் பேசுகையில், "இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான உறவில், இலங்கையின் வடபகுதி முக்கிய பங்கு வகித்து வந்தது. தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையிலான கப்பல் போக்குவரத்து இந்த இணைப்பின் பிரதான அம்சமாக இருந்தது. வடக்கில் பலாலி விமான நிலையத்தை புனரமைக்கும் பணியில் இப்போது இந்தியா ஈடுபட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகப் பகுதி கடற்பரப்பில் காணப்படும் சேதமடைந்த கப்பல் கழிவுகளை அகற்றி துறைமுகத்தை துரிதமாகச் செயற்படச் செய்வதற்கும் இந்தியா உதவி வருகிறது. இந்தியாவுக்கும், இலங்கையின் வடபகுதிக்கும் இடையே காணப்படும் இத்தகைய இறுக்கமான தொடர்புகள் மூலம், எதிர்காலத்தில் இந்திய-இலங்கை உறவில் இலங்கையின் வடபகுதி குறிப்பிடத்தக்கதொரு பாத்திரத்தை வகிக்க முடியும்.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அமைக்கத் திட்டமிடப்பட்டு பின்னர், கிடப்பில் போடப்பட்ட தரைவழிப்பாலம் அமைக்கும் திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கும், இலங்கையின்ன் வடபகுதிக்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய இறுக்கமான உறவுகள் மேலும் பலமடைவதற்கு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான இராமர் பாலம் விரைவில் அமைக்கப்பட வேண்டும். நான் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த காலத்தில் இந்தப் பாலத்தை அமைப்பது குறித்து இரண்டு நாடுகளும் ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தன. ஆனால், பின்னர் இலங்கையின் வடக்கில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். இந்தியாவின் உறுதித்தன்மைக்கு அண்டை நாடுகளுடனான அதன் உறவு மிகவும் முக்கியமானது.
இந்தியாவின் நில மற்றும் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் சிறுபான்மை இனங்கள் சார்ந்த பிரச்சினைகள் இந்தியாவையும் ஒரு வகையில் பாதிக்கிறது. இந்த நாடுகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் உறுதித்தன்மைக்கு அவசியமானது. இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் முரண்பாடுகளும், பட்டினியும் நிலவும் போது, இவை எவற்றுடனும் தொடர்புபடாமல் ஒரு தீவு போல இந்தியா இருந்து விட முடியாது. இந்தியாவின் பெரிய பரப்பளவும், அதன் மக்கள் தொகை உள்ளிட்ட பலமான அம்சங்கள் காரணமாகவும் அண்டை நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சம் கொள்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த நிலைமையை மாற்றி அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணவே கட்டியெழுப்பவே இந்தியா பாடுபடுகிறது. சார்க் அமைப்பு தனக்குச் சவால் விடும் ஒரு அமைப்பு என்றே ஒரு காலத்தில் இந்தியா கருதியிருந்தது. ஆனால், சார்க் பற்றிய இன்றைய இந்தியாவின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது. இதுபோன்று அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு புதிய மாற்றங்களுடன் வளர்ந்து வருகிறது. தெற்காசியாவின் பூகோள அரசியலில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள சகல இன, மத மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். இதற்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். உறுதியான நிலைத்து நிற்கக் கூடிய ஒரு சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியா எமது உறவினர், சீனா எமது நண்பர் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளதால் எங்களுக்குப் பிரச்சினையில்லை. அவர் கூறியபடியே இருந்து விட்டுப் போகட்டும்," என்றார்.
No comments:
Post a Comment