நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளியான அப்சல் குரு கடந்த சனிக்கிழமை திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜிகாத் குழு இன்று இஸ்லாபாத்தில் மாநாடு நடத்தியது. இதில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் பத்ர் முகாகிதீன், ஐக்கிய ஜிகாத் கவுன்சில் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான பல்வேறு போராளிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேசிய பிரஸ் கிளப்பில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அத்துடன் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவது மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புனிதப் போரை வலுப்படுத்துவது என்றும் சபதம் செய்தனர். இதுதொடர்பாக ஜெய்ஷ் இ முகமது இயக்க மூத்த தலைவர் முப்தி அஸ்கார் கூறுகையில், இந்திய அரசாங்கத்தையும், பாதுகாப்பு படைகளையும் எங்கள் இயக்கம் பழிவாங்கும் என்றார். ஐக்கிய ஜிகாத் கவுன்சில் தலைவர் செய்யது சலாஹூதீன் பேசும்போது, ‘காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அப்சல் குரு தூக்கு தொடர்பாக பாகிஸ்தான் மவுனமாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் நேரம் வீணாகிறது. எனவே, புனிதப்போர் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும்’ என்றார். இது போன்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பாகிஸ்தான் தலைநகரில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்துவது கடந்த 4 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment