காதல்' என்ற மூன்று எழுத்தை சுவாசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். பெரும்பான்மையானோர், ஏதாவது ஒரு தருணத்தில் காதல் என்ற காற்று அவர்களை தொட்டுச் சென்றிருக்கும். காதல் என்ற வார்த்தை சக்தி மிக்கது. எதையும் சாதிக்கு தூண்டும் சக்தி அதற்கு உண்டு. இதற்கு எல்லையும் கிடையாது. சாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து இரண்டு இதயங்கள் இணைவது தான் காதல் . உலகம் முழுவதும், பிப்.14ம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் மட்டுமின்றி, திருமணமான தம்பதியரும் பரிசு, வாழ்த்துகளை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். எப்படி வந்தது: காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர் களத்திற்கு அழைத்தார். அதற்கு வரவேற்பில்லாததால், அவர்களின் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், இதற்கு மாறாக வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார் எனவும், ஆத்திரமடைந்த அரசர், வேலன்டைனுக்கு மரண தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
பின் அவரது நினைவு நாளையே "வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான், வேலன்டைன் தினம் முழுவதும் காதலர் தினமாக மாறியது. எப்படி கொண்டாடுவது: மேற்கத்திய நாடுகளில் இத்தினம், பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. வாழ்த்து அட்டைகள், சாக்லெட்டுகள், ரோஜாக்கள், ஆடை ஆபரணங்கள் என பரிசுப் பொருட்களை காதலர்கள் பரிமாறிக் கொள்கின்றனர். சில ஆண்டுகளாக இந்தியாவிலும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய இன்டர்நெட் யுகத்தில் சமூக இணையதளங்கள், இ-மெயில், எஸ்.எம்.எஸ், இன்டர்நெட் என காதலர் தினம் புதிய பரிணாமத்தில் செல்கிறது. எதிர்ப்பை மீறி: காதலர் தினம் என்பது மேற்கத்திய பண்பாடு; வியாபார நோக்கங்களுக்காக வர்த்தக நிறுவனங்கள், இத்தகைய கலாசாரத்தை இந்தியாவிலும் பரப்புகின்றன; அதை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. காதல் என்றாலே எதிர்ப்பு தான். அது போல, காதலர் தினமும் பல எதிர்ப்புகளை தாண்டி கொண்டாடப்படுகிறது.
காதலைப் பற்றி திருக்குறளில் தொடங்கி, இலங்கியங்கள், புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பல அர்த்தங்களை கூறுகின்றனர். காதல் என்ன கத்தரிக்காயா! காதல் என்பது மனது சம்பந்தப்பட்டது. இது ஒன்றும் பொருள் அல்ல. விரும்புவதை அடைவதற்கு. பள்ளிப்பருவத்தில் கூட காதல் சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒருவிதமான ஈர்ப்பே தவிர; காதலாக இருக்க முடியாது. தற்கால இளைஞர்கள், ஈர்ப்புக்கும், காதலுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். இளமைப் பருவத்தின் ஒரு "பகுதி' தான் காதல். குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, வருங்கால இளைஞர்கள் செயல்பட வேண்டும். உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்து விடு: அவளை உயிருக்கு உயிராய் நினைத்து விடு!
No comments:
Post a Comment