|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 August, 2011

நிலமோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது!

சென்னையில் நிலமோசடி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது பேரன் உதயநிதி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சென்னை, வில்லிவாக்கம் தர்மாதோப்பு அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடு செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையைச் சேர்ந்த ரெங்கா ரெட்டி என்பவர் காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், அறக்கட்டளைக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை பரிதி இளம்வழுதி உள்ளிட்டவர்கள் முறைகேடு செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வில்லிவாக்கம்  தர்மதோப்பு அறக்கட்டளை அறங்காவலர் எஸ்.ரங்கா ரெட்டி அளித்துள்ள புகார் மனு:-

வில்லிவாக்கத்தில் சர்வே எண்.166-ல் 7 ஏக்கர் 46 சென்ட் நிலம் 1875-க்கு முன்பு அரசாங்கத்தால் பொது மக்களின் பயன்பாட்டுக்காக தர்மதோப்பு அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டது. தர்மதோப்பில் டிரஸ்டிகளால் சிவன் கோவிலில் அன்னதானம், மருத்துவ சேவை என பணிகள் நடத்தப் படுகின்றன. அந்த சொத்தின் மீது போலி பட்டா கொடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கடந்த 2010-ல் போலீசில் புகார் அளித்தேன்.   உடனே அப்போதைய தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் வாசு என்னை மிரட்டினார். சொத்தை அபகரிக்க போலி பத்திரங்கள், பட்டா போன்றவற்றுக்கு ரூ. 3 கோடி வரை செலவு செய்து இருப்பதாக தெரிவித்தார். இப்பிரச்சினையில் தலையிட்டால் குடும்பத்தை சாகடிப்போம் என கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தகவல்கள் சேகரித்தபோது பரிதி இளம்வழுதி உதவியுடன் இந்த அறக்கட்டளை நில அபகரிப்பு மோசடி நடந்தது தெரியவந்தது.
பின்னர் ரவுடிகள் 7.5 ஏக்கரில் 4 ஏக்கர் 84 சென்ட் நிலத்தை அபகரித்தனர். பொது மக்களையும் டிரஸ்டிகளையும் விரட்டி விட்டு காம்பவுண்ட் சுவர் எழுப்பினார்கள். அபகரிக்கப்பட்ட டிரஸ்ட் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். அதில் தர்மதோப்பு அறக்கட்டளை சார்பில் 15 அடுக்கு மாடி மருத்துவமனை கட்டி பொது மக்களுக்கு அர்ப்பணிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அவர் இந்தப் புகார் மனுவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...