கடந்த மாதம் 13ம் தேதி, மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு குறித்து, விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட, வெடிமருந்து மற்றும் டைமர் கருவி போன்றவை தொடர்பாக, புலனாய்வு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையும் முரண்பட்டதாக உள்ளதால், விசாரணை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.மும்பையில் ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட மூன்று இடங்களில், கடந்த மாதம் 13ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், 26 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, தேசிய பாதுகாப்புப் படையினரும் (என்.எஸ்.ஜி.,), தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும் (என்.ஐ.ஏ.,) விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுநாள், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மகாராஷ்டிர அரசின் தடய அறிவியல் ஆய்வக நிபுணர்களை வரவழைத்த தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் இருந்து, மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அத்துடன் தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், தன்னிச்சையாக மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.தேசிய புலனாய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், மும்பையில் மூன்று இடங்களிலும் வெடித்த குண்டுகளில், அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் ஆயில் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தேசிய பாதுகாப்புப் படையினர் நடத்திய பரிசோதனையில், குண்டு வெடிப்புக்கு டிரிநைட்ரோடோலுனே (டிஎன்டி) என்ற வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. டி.என்.டி., வெடிமருந்தானது, வழக்கமான சிவில் பணிகளுக்காக பயன்படுத்தப்படக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுகளை வெடிக்கப் பயன்படுத்திய டைமர் கருவிகள் விஷயத்திலும், இரண்டு புலனாய்வு நிறுவனங்களும், மாறுபட்ட தகவல்களைக் கூறியுள்ளன. "குண்டு வெடிப்புக்கு டைமர் கருவி எதுவும் பயன்படுத்தப்படவில்லை; எலக்ட்ரானிக் சிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.
இப்படி இரண்டு புலனாய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், மாறுபட்ட தகவல்களைத் தெரிவித்துள்ளதால், ஜூலை 13ம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு குறித்து, விசாரித்து வரும் மும்பை போலீசின் பயங்கரவாத தடுப்புப்படையினர், விசாரணையில் எந்த விதமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை."குண்டு வெடிப்புக்கு, எந்த வகையான குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய, மிகவும் சரியான தடய அறிவியல் பரிசோதனை அவசியம். இதுதான் புலன் விசாரணையில் முதல் நடவடிக்கை. ஏனெனில், ஒவ்வொரு பயங்கரவாத அமைப்பினரும், குண்டுகளைத் தயாரிக்க ஒவ்வொரு விதமான முறையைபயன்படுத்துகின்றனர். இது இன்னும் உறுதி செய்யப்படாததால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை' என, விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment