|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 August, 2011

பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டிய போது, காமாட்சியம்மன் சிலை !

ஈரோட்டில், பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டிய போது, காமாட்சியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாக, பாதாள சாக்கடை திட்டப் பணி நடக்கிறது. இப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., 1வது வீதியில், நேற்று காலையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக குழிதோண்டும் பணி நடந்தது. இயந்திரத்தில் சுவாமி சிலை, பலி பீடம் தட்டுப்பட்டது. சிலையையும், பலி பீடத்தையும் மண்ணில் இருந்து எடுத்து, ஒரு வீட்டின் முற்றத்தில் வைத்தனர். தகவல் அறிந்து, சுற்றுப்பகுதி மக்கள் திரண்டனர். சிலையை அலங்கரித்து, மாலையிட்டு பூஜை செய்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதில், சில பெண்கள் சாமியாடினர். கூட்டம் அதிகரித்ததால், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கொத்துகாரர், வி.ஏ.ஓ., மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்கள், அச்சிலையை பீடத்துடன் எடுத்துச் சென்று, அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்குள் வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து, மண்டல துணை தாசில்தார் வன்னியசெல்வம் மக்களிடம் விசாரித்தார். இப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி கூறுகையில், ""எம்.ஜி.ஆர்., வீதியில் சிலை கண்டெடுப்பது இரண்டாவது முறை. கடந்த 1963ல் இதே இடத்தில் என் வீட்டுக்கு சாக்கடை கட்ட குழிதோண்டிய போது, சிவலிங்கம் மற்றும் பார்வதி சிலை கிடைத்தது. இப்பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்துகவுண்டர் தலைமையில் மக்கள் ஒன்று கூடி, மெயின் ரோட்டில் கோவில் கட்டி, இன்று வரை வழிபடுகிறோம். 48 ஆண்டுக்குப் பின், மீண்டும் பாதாள சாக்கடைக்கு குழிதோண்டும் போது, சிலை மற்றும் பலி பீடம் கிடைத்துள்ளது. இரண்டரை அடி உயர காமாட்சியம்மன் சிலை, கையில் கமலம் (தாமரை பூ) உள்ளது. 1953ம் ஆண்டுக்கு முன், இப்பகுதியில் கோவில் இருந்து அழிந்ததாக, முன்னோர் கூறினர், என்றார். துணை தாசில்தார் கூறுகையில், ""சிலை குறித்து அறநிலையத்துறை, தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து ஆய்வு செய்து எக்காலத்தைச் சேர்ந்த சிலை, இச்சிலையை எங்கு வைக்க வேண்டும் என்று தெரிவிப்பர், என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...