கோவை நகரில் கந்துவட்டி, மீட்டர் வட்டி என, பல விதமான வட்டிகளை வசூலிக்கும் 60 பைனான்சியர்களின் பட்டியல், போலீஸ் ஸ்டேஷன் வாரியாக தயாரிக்கப்பட்டு, கமிஷனர் அமரேஷ் புஜாரியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கந்துவட்டி பைனான்சியர்களிடம் பணத்தை முதலீடு செய்துள்ள போலீசாரின் விவரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன; கூடிய விரைவில் அதிரடி நடவடிக்கை பாயவுள்ளது.மதுரை, நெல்லை, திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கொள்ளை வட்டி பைனான்சியர்கள், கோவை நகரில் முகாமிட்டுள்ளனர்.இந்நபர்கள், சிறு, குறுந்தொழில் உரிமையாளர்கள், நகை பட்டறை உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள், கடைக்காரர்களுக்கு நாள் வட்டி, மாத வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி என பலவித வட்டி அடிப்படையில் 10 ஆயிரம் முதல், பல லட்ச ரூபாய் வரை கடன் வழங்குகின்றனர்.கடன் வழங்கும் போது, கடனாளியிடம் வெற்று முத்திரைத்தாள், பிராமிசரி நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெறுகின்றனர். கடன் தொகை அதிகமாக இருப்பின் தொகை, தேதி குறிப்பிடப்படாத வங்கி காசோலைகளையும், சொத்துப் பத்திரத்தையும் வாங்கிக் கொள்கின்றனர்.
குறித்த காலத்துக்குள் அசலுடன் வட்டியை செலுத்தாவிடில், வட்டிக்கு வட்டி போட்டு 100க்கு 20 ரூபாய் வரை வட்டி வசூலிக்கின்றனர். கந்துவட்டி தொழிலில் ஈடுபடும் நபர்களிடம் கோவை போலீஸ் அதிகாரிகள் சிலர், பல லட்ச ரூபாயை முதலீடு செய்து வட்டி பெறுவது குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, கொள்ளை வட்டி வசூலிக்கும் பைனான்சியர்கள் மீதான புகார்களை விசாரிக்க, "கந்துவட்டிக்கு எதிரான விசாரணைப் பிரிவை' சமீபத்தில் துவக்கினார்.பட்டியல் தயாரிப்பு: இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி கோவை மாநகர எல்லைக்குள் யார், யார் கந்துவட்டி, மீட்டர் வட்டி, மாத வட்டி, நாள் வட்டி பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரத்தை, போலீஸ் ஸ்டேஷன் வாரியாக சேகரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். நம்பிக்கையான அதிகாரிகள் இதற்கான பணியில் ஈடுபட்டு, பைனான்சியர்களின் பின்னணி, அலுவலகம் மற்றும் வீட்டு முகவரி, அவர்களிடம் வேலை செய்யும் அடியாட்களின் எண்ணிக்கை, அவர்கள் மீது புகார் மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் திரட்டி கமிஷனரிடம் அளித்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ளூர், வெளிமாவட்ட பைனான்சியர்கள் 60 பேரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தவிர, பைனான்சியர்களிடம் முதலீடு செய்துள்ள போலீஸ் அதிகாரிகள், போலீஸ் துறை சாராத நபர்களுடன் கூட்டு வைத்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. போலீஸ் குடியிருப்புகள் தோறும் சில போலீசாரும், அவர்களது மனைவிமாரும் ஏலச்சீட்டு நடத்துவதாகவும், மாத வட்டிக்கு போலீசாருக்கே கடன் வழங்கி வருவது தொடர்பாகவும், கமிஷனரிடம் விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ளோரை கண்காணிக்கவும், புகார்கள் வரும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து உடனடி கைது, சோதனை நடவடிக்கைகளை துவக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ள போலீஸ் கமிஷனர், பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment