ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு வரும் 6ம் தேதி கோவையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வது நமது முதல் கடமை என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஈழத் தமிழர் உரிமை காக்க, தமிழ் ஈழம் விடியல் காண 3 தமிழர் உயிரைக் காக்க, கோவை மாநகரில், சிதம்பரம் பூங்காவில் நவம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) மாலையில், உணர்ச்சிக் காவியம் படைப்போம். தமிழ் ஈழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துகின்றது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை ஏற்கின்றார்.தமிழ் ஈழ விடுதலை உணர்வாளர்களும், ஈழத் தமிழர் படுகொலையை நடத்திய இந்திய அரசின் துரோக முகத்திரையைக் கிழிக்க போர் முழக்கம் எழுப்புவோரும், இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர் ரான் ரைட்னர், ஐக்கிய நாடு அவையின் வல்லுநர் குழு அறிக்கையை வெளியிடுகின்றார்.
நான் அதனை பெற்றுக் கொள்கின்றேன். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மென்னியை முறிக்க, தூக்குக் கயிற்றை வீச முயலும் இந்திய அரசின் முயற்சிகளை முறியடிப்போம். லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு, இந்திய அரசு வேலை செய்கிறது. அதனால் தான் 2013ம் ஆண்டு இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறியுள்ளார்.ராஜபக்சே அரசை உலக குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த கோவையில் சூளுரைப்போம். தமிழ்க் குலத்தின் உரிமை காக்க, தோள் தட்டிடப் புறப்படு கோவை நோக்கி என, தியாகிகள் செங்குருதி அழைக்கின்றது. கோவையில் நடக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்பது, நமது முழு முதல் கடமை. அணி திரண்டு வாருங்கள் தமிழர்களே என அழைக்கின்றேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment