சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 6,200 முதல் 6,800 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் வருமானம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே சமயத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. டாஸ்மாக் மூலம் 2005 ல் ரூ. 7,335 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்தது. அந்த ஆண்டில் மதுவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,760 பேர். 2010 ம் ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை வருமானம் ரூ. 16 ஆயிரம் கோடி. அதே ஆண்டில் குடிபோதையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 409 பேர். இப்போது 800 புதிய டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் குடிபோதையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டக்கூடும்.
அரசின் இந்த நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21 க்கு எதிரானது. எனவே அரசு புதிதாக 800 டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும். இம்மனு இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டு ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதித்தால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை மேலும் உயரும். இதனால் புதிய மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதிகள் இதுபற்றி 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசு, தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment