உத்தரபிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி சுகாதார திட்டத்தில் நடந்துள்ள மோசடி தொடர்பாக டிஸ்மிஸ்' செய்யப்பட்ட மந்திரியின் வீடு உள்பட 60 க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அதிகாரி ஒருவர் வீட்டில் 3 கிலோ தங்கமும் ரூ.1 கோடியே 10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாயாவதி ஆட்சி நடத்தும் உத்தரபிரதேச மாநில அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இந்த திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், நிதி மோசடி நடந்து இருப்பதாகவும் மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. மருந்து வாங்கியது, மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் சப்ளைக்கு ஒப்பந்தம் வழங்கியது ஆகியவற்றில் இந்த மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி முதல் கட்டமாக 5 வழக்குகள் பதிவு செய்தனர்.இந்த முறைகேடுகள் தொடர்பாக சுகாதாரத்துறையின் அதிகாரிகள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. ரூ.10 ஆயிரம் கோடி சுகாதார திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி ஆனந்த் குமார் மிஸ்ராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் ரூ.10 ஆயிரம் கோடி ஊரக சுகாதார திட்டத்தில் பல்வேறு மோசடிகள் நடந்து இருப்பது உறுதியானது. இதுகுறித்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் கடந்த 2 ந் தேதி சி.பி.ஐ. 6 வழக்குகள் பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சோதனை நடத்த வாரண்டு பெற்றது.
இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இந்த குழுவினர் நேற்று காலையில் உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா மாநிலங்களில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக ஒரே நேரத்தில் சோதனைகளை தொடங்கினார்கள். மாயாவதி மந்திரி சபையில் ஆனந்த் குமார் மிஸ்ராவுக்கு பின்னர் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் பாபு சிங் குஷ்வாகா. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாவதி டிஸ்மிஸ் செய்தார். அவர் உடனே தேர்தல் டிக்கெட் வாங்குவதற்காக பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
ரூ.10 ஆயிரம் கோடி சுகாதாரத்திட்ட மோசடியில் இவருக்கு பெரும் பங்கு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ. அதிகாரிகள் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் முதலில் சோதனையை தொடங்கினார்கள். அப்போது அவர் வீட்டில் இல்லை. டெல்லியில் இருந்ததாக தெரிகிறது. அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், பாபு சிங் குஷ்வாகா எங்கிருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டனர். அவரது வீட்டில் இருந்து மோசடி சம்பந்தமாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின்போது, தலைநகர் லக்னோ, கோமதி நகரில் உள்ள ஜல் நிகாம் நிறுவனத்தின் பொது மேலாளர் பி.கே.ஜெயின் வீட்டில் இருந்து 3 கிலா தங்கமும் ரொக்கப் பணம் ரூ.1 கோடியே 10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. முறைகேடு நடந்தபோது அவர், அந்த நிறுவனத்தில் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு பிரிவில் பொது மேலாளராக பதவி வகித்து வந்தார். இந்த சோதனையை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை முன்னாள் டைரக்டர் ஜெனரல் டாக்டர் எஸ்.பி.ராமை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். முன்னாள் மந்திரி பாபு சிங் குஷ்வாகா, மேலும் பல சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் கைதாவார்கள் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment