தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக திமுக தலைவர் கலைஞர், சென்னையில் இருந்து இன்று (04.01.2012) காலை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர், தானே புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை மாநில அரசுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றார்.
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற திமுக தலைவர் கலைஞர் பாலவாக்கம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டிணம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் மரக்காணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கீழ்புத்துப்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரி சென்ற கலைஞரை, அம்மாநில திமுகவினர் வரவேற்றதுடன், அம்மாநிலத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தெரிவித்தனர்.
அரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். மத்திய, மாநில திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் என்றபோதும், அது காலதாமதமாகும் என்பதால், அதுவரைக்கும் திமுக சார்பில் வழங்கப்படும் உதவிகள் இடைக்கால நிவாரணமாக அமையும் என்ற நோக்கத்தோடு, உடனடியாக இந்த நிதிகள் ஒதுக்கப்படுகிறது என்றும், அதுதவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் திமுகவினர் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கலைஞர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment