கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், பிரேத பரிசோதனை பிரிவு டாக்டர்கள் சரியாக பணிக்கு வராததால், பெரும் குளறுபடிகள் ஏற்பட்டன. இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடத்தி, தடயவியல் பிரிவு டாக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாகவும், டாக்டர்கள் சிலர் வராமலேயே, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, மருத்துவமனை வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: மருத்துவமனைக்கு, தங்கள் விருப்பத்திற்கேற்ப டாக்டர்கள் வருகின்றனர். ஒரு சில டாக்டர்களை தவிர மற்றவர்கள், கூட்டாக செயல்பட்டு, வாரத்தில் ஒவ்வொரு நாளை, தங்கள் பணி நாளாக பிரித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, சிறிது நேரத்தில், தங்களுக்குச் சொந்தமான கிளினிக்குகளுக்கோ அல்லது தாங்கள் பணிபுரியும், தனியார் கிளினிக்குகளுக்கோ சென்று விடுகின்றனர்.
இதனால், மருத்துவக் கல்லூரியில் படிக்கும், பயிற்சியில் இருக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் அல்லது பயிற்சி டாக்டர்கள் தான், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நீதித்துறைக்கு முறையான சான்றிதழ் தர வேண்டிய தடயவியல் துறையும், இதே நிலையில் தான் உள்ளது. உயரதிகாரிகளின் ஒத்துழைப்புடன், இவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பணிக்கு வந்து செல்வதுமாக உள்ளதால், தடயவியல் பிரிவின் பணிகளில், குளறுபடிகள் நடந்துள்ளன. இவ்வாறு, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையின் சீர்கேடுகள் குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், நேற்று முன்தினம், திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பதிலில், ""தடயவியல் துறையில், இரு தரப்பினராக, பணியாளர்கள், டாக்டர்கள், செயல்படுகின்றனர். எனவே, பிரச்னையை தீர்க்க, கூண்டோடு மாற்ற உள்ளோம்'' என கூறினார். இதன் தொடர்ச்சியாக, தடயவியல் டாக்டர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, தடயவியல் பிரிவு டாக்டர் அன்புச்செல்வன், சென்னை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கும், டாக்டர் விக்ரம், கே.கே., நகரில் உள்ள, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கிளைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், தடயவியல் பிரிவு அறிவியல் உதவியாளர் லோகநாதன், சென்னை அரசு பொது மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன் கூறியதாவது: பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளோம். இனி தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையிலும், தடயவியல் பிரிவில் பணிகள் பாதிக்காமல் இருக்கவும், சீரமைப்பு பணி மேற்கொண்டுள்ளோம். முதற்கட்டமாக, இரண்டு டாக்டர்கள் மற்றும் அறிவியல் பிரிவு உதவியாளரை இடமாற்றம் செய்துள்ளோம். விரைவில், துறையிலுள்ள மற்றவர்களும் மாற்றப்படுவர். இனி பிரச்னைகள் இல்லாமல் இருக்க என்ன தேவையோ, அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறினார். மருத்துவமனையில் குளறுபடிகள் நடப்பது உறுதியாகி உள்ளது. அப்படியென்றால், குளறுபடியான பிரேத பரிசோதனைகள் எத்தனை? அந்த சான்றிதழ்களின் நிலை என்ன? பிரேத பரிசோதனை அடிப்படையில், நீதித்துறைக்கு கொடுத்த வாக்குமூலம் மற்றும் சாட்சிகள் உண்மையானதா? பிரேத பரிசோதனைகளில் டாக்டர்கள் இருந்தனரா; நீதித்துறை உத்தரவுப்படி, பிரேத பரிசோதனைகள் வீடியோ எடுக்கப்பட்டதா; அந்த வீடியோக்கள் எடிட் செய்யப்படாமல், சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஆவணமாக வைக்கப்பட்டதா; பிரேத பரிசோதனையில், டாக்டர்கள் தான் இருக்கின்றனரா அல்லது உதவியாளர்கள், அடிப்படைத் தொழிலாளிகள் இருந்தனரா என்ற, பல கேள்விகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment