இந்திய அமைச்சர் மட்டும் அல்ல அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கை வந்து கூறினாலும் அதிகாரப்பகிர்வு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கம் அரசியல் தீர்வு விஷயத்தில் பெரிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் உள்நாட்டு சதியாகும். அரசியல் தீர்விற்கு அதிகாரப் பகிர்வை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பில் இருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும். நாட்டில் இனவாதம் உள்ளது என்பது போலியான மாயை. எனவே தேவையற்ற விஷயங்களை பேசுவதில் பயனில்லை. இன்று நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிவிட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல சக்திகள் செயற்படுகின்றன. 13 ஆவது திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. ஏனெனில் சர்வதேச நாடுகள் இந்தியா வழியாகத்தான் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது. அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியாவிற்கு இலங்கை அரசு உறுதி அளிக்கவில்லை. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தான் வாய் உளறி விட்டு வந்துள்ளார். இதற்கு தான் நாய் வேலையை கழுதை செய்யக் கூடாது என்பார்கள். எப்படி இருப்பினும் இன்று அரசிற்குள் 60 வீதமானோர் சூழச்சிக்காரர்களே உள்ளனர்.
No comments:
Post a Comment