விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சில திருட்டு வழக்குகள் தொடர்பாக, திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் 22.11.2011 அன்று இரவு மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 இருளர் பெண்களை காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, காவல் துறையில் ஒரு புகார் பெறப்பட்டது. குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (i)ன்படி இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இருளர் இனத்தைச் சேர்ந்த சில பெண்களை காவல் துறையினர் இரவு நேரத்தில் வாகனத்தில் வைத்திருந்ததாக தெரிய வந்ததால், எனது உத்தரவின் பேரில், ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான புகார், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் அவர்களால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் துறையினர் குற்றம் இழைத்ததாக இந்த விசாரணை முடிவில் தெரியவந்தால், அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment