ஊழலுக்கு எதிராக மத்திய அரசு உருவாக்கியுள்ள லோக்பால் வரைவு மசோதாவின் சட்ட வரம்புக்குள் வெளிநாட்டு நன்கொடை வசூலிக்கும் என்.ஜி.ஓக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன்மூலம் அன்னா ஹசாரேயின் குழுவினரின் என்.ஜி.ஓ. அமைப்புக்கும் மத்திய அரசு 'செக்' வைத்துள்ளது. ஆனால், இந்த மசோதாவுக்கு அன்னா ஹசாரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த மசோதா இப்போது அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 30 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. நாளை இந்த மசோதா இறுதி செய்யப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந் நிலையில் அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து வருகின்றன.
இந்தத் தகவல்களின்படி, ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக வெளிநாட்டு நன்கொடை வசூலிக்கும் என்.ஜி.ஓக்கள், இந்தியாவில் பொது மக்களிடமிருந்து ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக நிதி வசூலிக்கும் என்.ஜி.ஓக்கள் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர் என்று தெரிகிறது. இதே போல நன்கொடை வசூலிக்கும் மீடியா நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரப்படுவர்.
அதே நேரத்தில் பிரதமர் பதவி இந்த மசோதாவின் வரம்புக்குள் வராது (அதாவது லோக்பால் சட்டப்படி பிரதமர் பதவியில் இருப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது). பிரதமர் பதவிலிருந்து ஒருவர் விலகிய பின்னரே அவர் மசோதாவின் வரம்புக்குள் வருவார். அதே போல நீதிபதிகள், கீழ்மட்ட அதிகாரிகளும் இந்த மசோதாவின் வரம்புக்குள் வர மாட்டார்கள். அதே நேரத்தில் அரசு நிர்வாகத்தில் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ பிரிவில் வரும் மூத்த அதிகாரிகள் லோக்பால் வரம்புக்கள் கொண்டு வரப்படுவர். லோக்பால் அமைப்புக்கு அரசியல் சட்ட அதிகாரம் வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் லோக்பால் வரம்புக்குள் வராது. இவ்வாறு வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஹசாரே நிராகரிப்பு: ஆனால், லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள், சிபிஐ மற்றும் கீழ் மட்ட அதிகாரிகளையும் கொண்டு வர வேண்டும் என்று கோரி வரும் ஹசாரே குழுவினர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு அதை நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இது குறித்து ஹசாரே குழுவின் உறுப்பினர் அரவிந்த் கெஜரிவால் கூறுகையில், என்ஜிஓ அமைப்பிலும் கடும் ஊழல் நிலவுவது உண்மை தான். அதே நேரத்தில் அரசிடமிருந்து நிதி பெறும் என்.ஜி.ஓக்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
மேலும் சிபிஐயையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஆனால், சிபிஐயை வரம்பிலிருந்து வெளியே வைத்து, அதை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. சிபிஐ அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் லோக்பால் என்பதே வெறும் காலி டப்பாவாகத்தான் இருக்கும் என்றார். இந்தக் குழுவில் உள்ள கிரண் பேடி கூறுகையில், எம்.பிக்கள் மற்றும் நீதிமன்றங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களை லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரவில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் சி.பி.ஐயை கொண்டு வராவிட்டால், நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெற்றி பெறவே இயலாது. மத்திய அரசு தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் மக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என்றார்.
No comments:
Post a Comment